374திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



பெற்று, இன்பத்துள் இன்பத்து ஆழ்ந்தான் - சிறந்த மகிழ்ச்சிக் கடலுள்
அழுந்தினான்.

     அமாவாசையும் உவா எனப்படுமாகலின் பூரணையைத் தலையுவா
என்றார். உவரி என ஓங்க எனவும், பயனேபோல் ஓங்க மகப்பெற்று
எனவும் கூட்டுக. இன்பத்துள் இன்பம் - இடையறா இன்பம். (89)

அம்மகனை முடிசூட்டி யரசாக்கி
     வாதவூ ரமைச்சர் சார்பான்
மெய்ம்மைநெறி விளங்கியிரு வினையொப்பி
     லரன்கருணை விளைந்த நோக்கான்
மும்மைமலத் தொடர்நீந்திச் சிவானந்தக்
     கடற்படிந்து முக்கண் மூர்த்தி
செம்மலர்த்தா ணிழலடைந்தான் றிறலரிமர்த்
     தனனென்னுந் தென்பார் வேந்தன்.

     (இ - ள்.) திறல் அரிமர்த்தனன் என்னும் தென்பார் வேந்தன் -
ஆற்றல் பொருந்திய அரிமருத்தனனென்னும் பாண்டி நாட்டு மன்னன்,
அம்மகனை முடிசூட்டி அரசு ஆக்கி - அம்மகனுக்கு முடிசூட்டி அவனை
அரசனாக்கி, வாதவூர் அமைச்சர் பால் - வாதவூரடிகளாகிய அமைச்சரது
சம்பந்தத்தால், மெய்ம்மைநெறிவிளங்கி - உண்மைநெறி விளங்கப்பெற்று,
இருவினை ஒப்பில் அரன் கருணை விளைந்த நோக்கால் -
இருவினையொப்பின்கண் உண்டாகிய இறைவனது அருள் நோக்கால்,
மும்மைமலத் தொடர் நீந்தி - மூன்று மலங்களாகிய தொடரினைக் கடந்து,
சிவானந்தக் கடல் படிந்து - சிவானந்தமாகிய கடலில் மூழ்கி,
முக்கண்மூர்த்தி செம்மலர்த்தாள் நிழல் அடைந்தான் - மூன்று
கண்களையுடைய சோமசுந்தரக் கடவுளின் சிவந்த தாமரை மலர்போன்ற
திருவடி நிழலை அடைந்தனன்.

     சார்பால் - சார்ந்திருந்தமையால், சம்பந்தத்தால். இருவினை யொப்பு -
நல்வினைப் பயனாகிய இன்பத்தையும் தீவினைப்பயனாகிய துன்பத்தையும்
ஒப்பு நோக்குதல். மும்மை, மை பகுதிப்பொருள் விகுதி. மும்மலம் -
ஆணவம், கன்மம், மாயை. (90)

                  [- வேறு]
வழுதியால் விடுக்கப் பட்ட வாதவூர் முனிக டம்மைப்
பழுதிலாப் பாடல் கொள்வர் பதிபல பணிந்து போந்து
முழுதுணர் மறையோர் வேள்விப் புகையண்ட முடிகீண் டூழி
எழுவட வரைபோற் றோன்று மெழிற்றில்லை மூதூர் சோர்ந்தார்.

     (இ - ள்.) வழுதியால் விடுக்கப்பட்ட வாதவூர் முனிகள் -
பாண்டியனால் விடுக்கப்பட்ட வாதவூர் முனிவர், தம்மைப் பழுது
இலாப்பாடல் கொள்வார் பதி பல பணிந்து போந்து - தம்முடைய
குற்றமில்லாத பாடல்களை ஏற்றுக் கொள்ளும் இறைவர் திருப்பதிகள்