சங்கத்தார் கலகந் தீர்த்த படலம் 135



செய்யுள் - சூத்திரம், உரை, பாட்டு என்னும் மூன்றற்கும் பொதுவான பெயர்.
கவி - பாட்டு. செய்யுளாகிய கவியெல்லாம் என்க. ஆடுதல் - கூறுதல். (6)

வன்றாண்மழ விடையாயவன் மணிவாணிக னூமன்
என்றாலவன் கேட்டெங்ஙன மிப்பாடலிற் கிடக்கும்
நன்றானவுந் தீதானவு நயந்தாய்ந்ததன் றன்மை
குன்றாவகை யறைவானென மன்றாடிய கூத்தன்.

     (இ - ள்.) வல்தாள் மழவிடையாய் - வலிய கால்களையுடைய
இளமையாகிய இடபவூர்தியை யுடையாய், அவன் மணிவாணிகன் ஊமன்
என்றால் - அவன் மணிகளின் குணங் குற்றங்களை ஆராயும் வணிகர்
மரபினனும் ஊமனுமாகில், அவன் நயந்து கேட்டு - அவன் (இப்பாடலை)
விரும்பிக் கேட்டு, இப்பாடலில் கிடக்கும் நன்றானவும் தீது ஆனவும்
ஆய்ந்து - இதிற் கிடக்கின்ற நன்மையையும் தீமையையும் ஆராய்ந்து,
அதன் தன்மை குன்றாவகை எங்ஙனம் அறைவான் என - அதன்
தன்மையைக் குறைவின்றி எவ்வாறு கூறுவான் என்று வினவ, மன்று ஆடிய
கூத்தன் - வெள்ளியம்பலத்திலே திருக்கூத்தாடிய பெருமான்.

     மணிவாணிகனா யுள்ளான் பாட்டின் றன்மையை ஆராய்ந்தறிதல்
எங்ஙனம், ஊமனாயுள்ளவன் அதனைச் சொல்லுவதெங்ஙனம் என
ஐயுற்றுவினாவினாரென்க. (7)

மல்லார் தடம் புயவாணிக மைந்தன்றனக் கிசையச்
சொல்லாழமும் பொருளாழமுங் கண்டான்முடி துளக்காக்
கல்லார்புயம் புளகித்துளங் களிதூங்குவன் கலகம்
எல்லாமகன் றிடுமுங்களுக் கென்றாலயஞ் சென்றான்.

     (இ - ள்.) மல்ஆர்தடம்புய வாணிக மைந்தன் - வலி நிறைந்த
பெரிய தோளையுடைய அவ்வணிக மைந்தன் - தனக்கு இசைய - தனக்குப்
பொருந்த, சொல் ஆழமும் பொருள் ஆழமும் கண்டால் -
சொல்லாழத்தையும் பொருளாழத்தையும் காணின், முடிதுளக்கா - முடியை
அசைத்து, கல் ஆர் புயம் புளகித்து உளம்களி தூங்குவன் - மலைபோன்ற
தோள்புளகித்து உள்ளத்தின்கண் மிக மகிழ்வன்; உங்களுக்குக் கலகம்
எல்லாம் அகன்றிடும் - உங்களுள் நேர்ந்த கலகம் அனைத்தும் நீங்கும்,
என்று - என்று கூறியருளி, ஆலயம் சென்றான் - திருக்கோயிலுட்
சென்றருளினான்.

     துளக்கா, செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம், கல் - மலை.
ஆர், உவமவுருபு. (8)

பின்பாவல ரெல்லாம்பெரு வணிகக்குல மணியை
அன்பாலழைத் தேகித்தம தவையத்திடை யிருத்தா
நன்பான்மலர் நறுஞ்சாந்துகொண் டருச்சித்தனர் நயந்தே
முன்பாலிருந் தருந்தீந்தமிழ் மொழிந்தாரவை கேளா.