378திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



என்னும் திருவாசகங்களானறிக. கூத்தன் உரு ஐந்தெழுத்தாதலை,

"ஆடும் படிகேணல் லம்பலத்தா னையனே
நாடுந் திருவடியி லேநகரம் - கூடும்
மகர முதரம் வளர்தோள் சிகரம்
பகருமுகம் வாமுடியப் பார்"

என்னும் உண்மை விளக்கத்தாலறிக. திருநாவுக்கரசர்.

"மடைக்கல மாகவுன் னாமத் தெழுத்தஞ்செ னாவிற்
கொண்டேன்"

எனத் திருவைந்தெழுத்தை வாளாக உருவகப் படுத்தினமை இங்கே
சிந்திக்கற் பாலது. ஐந்தெழுத்தின் என்பதில் இன் சாரியை அல்வரிக்கண்
வந்தது. கால் பாய, கால்துணைச் சொல். அருந்தாது அருந்தல் - தற்போதங்
கொண்டு நுகராது திருவருள் வழி நின்று நுகர்தல். இஃது இயைபுருவக
அணி.
(95)

மானிரையுங் குயவரியும் வந்தொருங்கு
     நின்றுரிஞ்ச மயங்கு கானத்
தானிரைகன் றெனவிரங்கி மோந்துநக்க
     வானந்த வருட்கண் ணீரைக்
கானிறைபுள் ளினம்பருகக் கருணைநெடுங்
     கடலிருக்குங் காட்சி போலப்
பானிறவெண் ணீற்றன்ப ரசைவின்றிச்
     சிவயோகம் பயிலு நாளில்.

     (இ - ள்.) மயங்கு கானத்து - இருள் செறிந்த அக்காட்டின்கண்,
மான் நிரையும் குயவரியும் வந்து ஒருங்கு நின்று உரிஞ்ச - மான்
கூட்டங்களும் புலிகளும் வந்து ஒருசேரநின்று உரிஞ்சவும், ஆன்நிரை -
பசுக்கூட்டங்கள், கன்று என இரங்கி மோந்து நக்க - கன்று என்று
இரங்கிமோந்து நக்கவும், ஆனந்த அருள்கண்ணீரை - அருள்மயமாகிய
இன்பக் கண்ணீரை, கான் நிறை புள் இனம் பருக - அக்காட்டில் நிறைந்த
பறவைக் கூட்டங்கள் பருகவும், கருணைநெடுங்கடல் இருந்த காட்சிபோல -
நீண்ட அருட்கடல் இருந்த தோற்றம் போல, பால்நிற வெண்நீற்று அன்பர் -
பால் போன்ற நிறத்தியைுடைய வெண்ணீற்றினை யணிந்த அடிகள், அசைவு
இன்றிச் சிவயோகம் பயிலும் நாளில் - சலிப்பற்றுச் சிவயோகம் பயிலாநின்ற
நாளில்.

     குயம் - அரிவாள். குயவரி - குயம்போலும் வரிகளையுடைய புலி;
அன்மொழித்தொகை. தல விசேடத்தாலும் தவச்சிறப்பாலும் தம்முட்
பகையுள்ள விலங்குகளும் பகைமையொழிந்தன என்பார் ‘மானிரையும்
குயவரியும் வந்தொருங்கு நின்றுரிஞ்ச’ என்றார். உரிஞ்சவும் நக்கவும்
பருகவும் பயிலுநாளில் என்றது சாந்தமயமான சிவயோக நிலையை
விளக்கியபடி. (96)