382திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



     (இ - ள்.) கனவினும் நீறுகாணாக்கைதவர் - கனவிலும் திருநீற்றைக்
காணாத வஞ்சகராகிய அப்புத்தர்கள், காட்சியானும் மனஅனுமானத் தானும் -
காட்சியளவையினாலும் கருதரளவையினாலும், வாசகப் பெருமான் தம்மை
வினவிய மூன்றும் - மணிவாசகப் பெருமானார் தம்மைக்கேட்ட மூன்றையும்,
உத்தேச ஆதியின் விரித்தார் - உத்தேச முதலியவற்றால் விரித்துக் கூறினர்;
வேதம் அனையவர் கேட்டு - மறைபோல்வாராகிய அடிகள் கேட்டு,
அம்மூன்றும் அனுவாதம் செய்து உட் கொள்ளா - அம்மூன்றினையும்
அனுவதித்து மனத்துட்கொண்டு.

     புத்தர்கட்குக் காட்சியும் அநுமானமுமே பிரமாண மாதலால்
‘காட்சியானு மனவநுமானத்தானும்’ என்றார். மனத்தாற் கருதியறிதலே
அநுமானம் என்பார் ‘மனவனு மானத்தானும்’ என்றார் என்க. வினவிய
மூன்று - இறை, நூல், கதி என்பன. உத்தே சாதியின் - உத்தேசம்,
இலக்கணம், பரீக்கை என்பனவற்றால். உத்தேசம் - கூறும் பொருளைப்
பெயர் மாத்திரையான் எடுத்தோதல்; இலக்கியம். இலக்கணம் - சிறப்பியல்பு;
அவ்வியாத்தி அதிவியாத்தி அசம்பவம் என்னும் முக் குற்றங்களும் இல்லாத
தன்மை. பரீக்கை - இலக்கியத்தில் இலக்கணம் உளதாதலை ஆராய்தல்.
உத்தேசாதி, தீர்க்கசந்தி. அறிவு நிறைவானும், தூய்மையானும் வேதத்தை
உவமை கூறினார். அனுவாதஞ்செய்தல் - பிறர் கூறியவற்றை ஒருபயன்
நோக்கித் தான் எடுத்து மொழிதல். ‘ஆதியுத்தேசத்தானு மிலக்கண
வமைதியானும் சோதனை வகைமையானுஞ் சொன்னநூலனுவாதித்து’ என்னும்
தடாதகைப்பிராட்டியார்
திருவவதாரப்படலச் செய்யுளுரையில்
உரைத்தமையுங் காண்க. (102)

இன்றிவர்க் கனுமா னாதி யெடுப்பதென் னென்று காட்சி
ஒன்றுகொண் டவர்க டாமே யுடம்படன் மறுத்தார் காட்சி
அன்றியே தின்மை யாலே யனுமான வளவை யாலும்
நின்றவன் றுங்கோ னாதி நிறுத்திய மூன்று மென்றார்.

     (இ - ள்.) இன்று இவர்க்கு அனுமான ஆதி எடுப்பது என்என்று -
இப்பொழுது இவர்கட்குக் கருதல் முதலிய அளவைகளை எடுத்துகூறுதல்
எதற்கு என்று கருதி, காட்சி ஒன்றுகொண்டு - காட்சியளவை ஒன்றினாலே,
அவர்கள் தாமே உடம்படல் மறுத்தார் - அவர்களே உடன்படுமாறு மறுத்து,
காட்சி அன்றி ஏது இன்மையாலே - காட்சியளவை இன்றி ஏது
இல்லையாகலின், உங்கோன் ஆதி நிறுத்திய மூன்றும் - உமதுகடவுள்
முதலாக நீர் நிலைநிறுத்திய மூன்றும், அனுமான அளவையாலும் நின்றஅன்று
என்றார் - கருதலளவை யாலும் நின்றன அல்ல என்று கூறியருளினார்.

     அனுமானாதி - அனுமானமும் உரையளவையும். உடம்படல் -
உடம்படுங் கொள்கையை என்றுமாம். இறை முதலிய மூன்றும் காட்சிக்
கெய்தாமையின் காட்சியளவையானும், காட்சியின்றி அனுமானத்திற்குச் சிறந்த
கருவியாகிய ஏது பெறப்படாமையின் அனுமான வளவையானும் அவர்
அவற்றை நிறுவலாகாமை யுணர்க. தீக்கும் புகைக்குமுள்ள உடனிகழ்ச்சியை
அடுக்களை முதலியவற்றிற் கண்டிருந்தாலன்றி ‘இம்மலை தீயுடைத்து;