384திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



கொள்கையான் அல்லன் என்றார் - ஏனையோராற் காணுந்
தன்மையையுடையனல்லன் என்று கூறினர்

     அளவை - காட்சி முதலியன. எண்ணும்மைகள் தொக்கன. அடியார்க்கு
அடியாராதலைத் ‘திருநீற்றுத் தொண்டு’ என்றார். (105)

தேற்றமில் லாதா ருங்கள் சிவனுக்குந் திருநீற் றுக்குந்
தோற்றமெப் படித்திட் டாந்தஞ் சொல்லுமி னென்றார் தூயோர்
வேற்றுமை யறநா மின்னே விளக்குது மதனை நீங்கள்
தோற்றபி னுமக்குத் தண்டம் யாதுகொல் சொன்மி னென்றார்.

     (இ - ள்.) தேற்றம் இல்லாதார் - தெளிவில்லாத அப்புத்தர்கள்,
உங்கள் சிவனுக்கும் திருநீற்றுக்கும் - உங்கள் சிவபெருமானுக்குந்
திருநீற்றுக்கும் உள்ள இயைபுக்கு, தோற்றம் எப்படி திட்டாந்தம் சொல்லுமின்
என்றார் - காட்சியளவை யாது உதாரணஞ் சொல்லுங்களென்றார்; தூயோர் -
புனிதராகிய அடிகள், நாம் இன்னே அதனை வேற்றுமை அற விளக்குது -
நாம் இப்பொழுதே அதனை வேற்றுமை நீங்க விளக்கிக் காட்டுவோம்;
நீங்கள் தோற்றபின் - நீவிர் தோல்வியுற்ற பின்னர், நுமக்குத் தண்டம் யாது
கொல் சொல்மின் என்றார் - நுமக்குத் தண்டனை யாது சொல்லுங்களென்று
வினவினார்.

     திருட்டாந்தம் எனற்பாலது விகாரமாயிற்று. திருட்டாந்தம் -
காணப்பட்ட முடிபுடையது. உதாரணம். கொல், அசை. (106)

செக்குர லிடையிட் டெம்மைத் திரிப்பது தண்ட மென்னா
எக்கராம் புத்தர் தாமே யிசைந்தன* ரெரிவாய் நாகங்
கொக்கிற கணிந்தா ரன்ப ருலர்ந்தகோ மயத்தை வாங்கிச்
செக்கரந் தழல்வாய்ப் பெய்து சிவந்திட வெதுப்பி வாங்கி.

     (இ - ள்.) செக்கு உரலிடை எம்மை இட்டுத் திரிப்பது தண்டம்
என்னா - செக்காகிய உரலின்கண் எம்மைப் போட்டுத் திரிப்பதுவே
தண்டனை என்று, எக்கராம் புத்தர் தாமே இசைந்தனர் -
இறுமாப்புடையராகிய புத்தர்கள் தாமே கூறி உடன் பட்டனர்; எரிவாய் நாகம்
கொக்கு இறகு அணிந்தார் அன்பர் - நஞ்சினையுடைய வாயையுடைய
பாம்பினையும் கொக்கினிறகினையும் அணிந்த சிவபெருமானுக் கன்பராகிய
மாணிக்கவாசகர், உலர்ந்த கோமயத்தை வாங்கி - காய்ந்த கோமயத்தை
எடுத்து, செக்கர் அம் தழல் வாய்ப்பெய்து - சிவந்த நெருப்பின்கண்போட்டு,
சிவந்திட வெதுப்பி வாங்கி - அது சிவக்குமாறு எரித்து அதனை எடுத்து.

     எரி என்றது நஞ்சினை. கோமயம் - ஆவின் சாணம். செக்கர் -
செம்மை; பண்புப்பெயர். (107)


     (பா - ம்.) * இசைத்தனர்.