388திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



மாசறு மணிபோற் பன்னாள் வாசக மாலை சாத்திப்
பூசனை செய்து பன்னாட் புண்ணிய மன்று ளாடும்
ஈசன தடிக்கீ ழெய்தி யீறிலா வறிவா னந்தத்
தேசொடு கலந்து நின்றார் சிவனருள் விளக்க வந்தார்.

     (இ - ள்.) சிவன் அருள் விளக்கவந்தார் - சிவபெருமான் திருவருளை
விளக்கிக்காட்ட வந்த வாதவூரடிகள், பலநாள் மாசு அறுமணிபோல்
வாசகமாலை சாத்தி - பலநாள்வரை குற்றமற்ற மாணிக்க மாலைபோலும்
திருவாசக மாலையைச் சாத்தி, பல்நாள் பூசனைசெய்து - பன்னாட்கள்வரை
வழிபாடு செய்து, புண்ணியமன்றுள் ஆடும் ஈசனது அடிக்கீழ் எய்தி -
அறவடிவாகிய அம்பலத்தி லாடியருளும் திருக் கூத்தனது திருவடி நிழலை
அடைந்து, ஈறு இலா அறிவு ஆனந்தத்தேசொடுகலந்து நின்றார் -
அழிவில்லாத சிவானந்த ஒளியுடன் கலந்து நின்றருளினார்.

     மணிபோலும் வாசகங்களாகிய மாலை என விரித்தலுமாம்.
மாணிக்கவாசகர் தில்லைப்பதியிலே மற்றும் பற்பல திருப்பதிகங்கள்
பாடியருளிப் பன்னசாலையில் எழுந்தருளி யிருக்கும்போது, இறைவர் ஓர்
மறையோர் கோலந்தாங்கி வந்து, "யாமிருப்பது பாண்டிநாடு; மாலும் அயனும்
காணவரிய இறைவரைப் பரிமீதேறிவரச் செய்துநும் பெருமையாலே பாண்டி
நாடு பெருவாழ்வுற்றது; நீர் திருப் பெருந் துறையில் ஐயன் திருவடியைச்
சேவித்துத் திருக்கழுக்குன்றம் சென்று தில்லை மன்றடைந்து புத்தரை வாதில்
வென்றீர் என்பது கேட்டு யாவரும் மகிழ்ச்சி யடைந்தனர்; நீர் அன்பினாலே
இறைவனைப் பாடிய பாடல்களை ஓதவெண்ணி இங்கு வந்தனம்; அவற்றை
விளங்கச் சொல்லியருளும்" என வேண்ட, அவரும் உவந்து தாம் பாடிய
திருவாசகம் முழுதும் சொல்ல ஐயர் அவற்றை யெல்லாம் ஏட்டிலெழுதிக்
கொண்டு, பின்னும் அவரை நோக்கி, "நீர் திருச்சிற்றம்பலமுடைய
பெருமானைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு ஓர் அகப்பொருட்
கோவை பாட வேண்டும்" என்று கூறி, அங்ஙனமே அவர் பாடிய
கோவையையும் எழுதிக்கொண்டு மறைந்தனர்; மாணிக்கவாசகர் வந்தவர்
இறைவரென்றறிந்து அன்பினால் அகங்குழைந்தழுது ஆனந்த வெள்ளத்தில்
மூழ்கினார்; மறைந்தருளிய இறைவர் தாம் எழுதிய திருவாசக திருக்கோவைத்
திருமுறை முடிவில் ‘மாணிக்கவாசகர் கூற எழுதிய இத் திமுறை அழகிய
திருச்சிற்றம்பல முடையார் எழுத்து’ என்று கைச்சாத்திட்டு மைக்காப்புச்
சேர்த்துத் திருவம்பலத்தின் வாயிற்படியில் வைத்தருளினனார் :
திருவாயிற்படியில் வைத்த திருமுறையைக் கண்ணுற்ற தில்லை மூவாயிரவரும்
வியப்புடன் அதனை யெடுத்துப் படித்து, முடிவில் திருச்சிற்றம்பல முடையார்
கைச்சாத் திட்டிருந்ததனையும் கண்டு அளவிலா ஆனந்தங்கொண்டு,
அத்திருமுறையின் பொருளையறிய விரும்பி வாதவூரடிகளை அடைந்து,
அங்கு நிகழ்ந்தவற்றைக் கேள்வியுற்று மனங்களி கூர்ந்து ‘நீர் பெருமான் மீது
பாடிய இத் தமிழ் மாலைக்குப் பொருள் தெரித்தருள்வீராக’ என வேண்ட,
மாணிக்கவாசகப் பிரானும் அவர்கள் உடன்வரச் சென்று பொன்னம்பலத்தை
அடைந்து ‘இத் தமிழ் மாலைப் பொருளாவார் இவரே’ என அங்குத்
திருநிருத்தம் புரியும் இறைவரைக் காட்டி, யாவருங் காணத் திருவடி நீழலிற்
கலந்தருளினர்; என்று திருவாதவூரடிகள் புராணம் கூறுவது அறியற்பாலது.
(114)

                      ஆகச் செய்யுள் - 3, 105.