பாண்டியன் சுரந் தீர்த்த படலம்391



புண்தோய் குருதி - பகைவருடலிற்பட்ட புண்ணின் குருதியிற் றோய்ந்த,
மறக் கன்னி - கொற்றவை வாழும், புகழ்வேல் - புகழ் பொருந்திய
வேலையுடைய, வழுதி நிகழ் நாளில் - பாண்டியன் அரசு புரிந்து வரும்
நாளில்.

     குடநாடு - மலைநாடு. அலங்குதலையுடைய ஆர்த்தார் என்னலுமாம்;
அலங்கல் - அசைதல். மருமான் - வழித்தோன்றல். குருதியையுடைய வேல்,
மறக்கன்னி வாழும் வேல், புகழ்வேல் எனத் தனித்தனி இயைக்க. வேலில்
கொற்றவை வாழும் என்பர். (4)

விண்டு ழாவிங் கைம்மாவும் வெறுக்கைக் குவையு மணிக்குவையும்
வண்டு வீழுந் தாரளக வல்லி யாய மொடுநல்கிக்
கண்டு கூடற் கோமகனைக் காலில் வீழந்து தன்னாடு
பண்டு போலக் கைக்கொண்டு போனான் றேனார் பனந்தாரான்.

     (இ - ள்.) தேன் ஆர் பனந்தாரான் - தேன் நிறைந்த பனம்
பூமாலையை யணிந்த சேரன், கூடல் கோமகனைக் கண்டு -
கூடற்றலைவனாகிய கூன் பாண்டியனை நேரிற் கண்டு, காலில் வீழ்ந்து -
அவன் காலில் வீழ்ந்து வணங்கி, விண் துழாவும் கைம் மாவும் - மேகத்தைத்
துழாவும் துதிக்கையினையுடைய யானைகளையும், வெறுக்கைக்குவையும் -
பொற் குவியல்களையும், மணிக்குவையும் - மணிக் குவியல்களையும், வண்டு
வீழும் தார் அளகவல்லி ஆயமொடு நல்கி - வண்டுகள் மொய்க்கும்
மாலையையணிந்த கூந்தலையுடைய கொடிபோன்ற பெண்கள் கூட்டத்தையுங்
கொடுத்து, தன் நாடு தனது நாட்டினை, பண்டுபோலக் கைக்கொண்டு
போனான் - முன் போலப் பெற்றுக்கொண்டு சென்றனன்.

     குவை - திரள். கைம்மா முதலியவற்றைத் திறையாக நல்கினான். வல்லி
ஆயம் - பரிசன மகளிர். கோமகனைக் கண்டு நல்கி வீழ்ந்து கைக்கொண்டு
போனான் என்க. (5)

சென்னிக் கோனுந் தானீன்ற திலகப் பிடியை யுலகமெலாம்
மின்னிக் கோதில் புகழொளியால் விளக்குஞ் சைவ மணிவிளக்கைக்
கன்னிக் கோல மங்கையருக் கரசி தன்னைக் கௌரியற்கு
வன்னிக் கோமுன் மணம்புணர்த்தி வாங்கி னான்றன் வளநாடு.

     (இ - ள்.) சென்னிக்கோனும் - சோழ மன்னனும், தான் ஈன்ற திலகப்
பிடியை - தான் பெற்ற திலதமணிந்த பெண்யானை போல்வாரும், கோது
இல் புகழ் ஒளியால் - குற்றமற்ற புகழாகிய ஒளியினால், உலகமெலாம்
மின்னி விளக்கும் சைவமணி விளக்கை - உலகமனைத்தையும் ஒளி வீசி
விளக்குகின்ற சைவ மாணிக்க விளக்குப் போல்வாருமாகிய, கன்னிக்கோல
மங்கையருக்கரசி தன்னை - கன்னிப் பருவமுடைய அழகிய
மங்கையர்க்கரசியாரை, கௌரியற்கு - அப்பாண்டியனுக்கு, வன்னிக் கோ
முன் மணம் புணர்த்தி - தீக்கடவுள் முன்னே மணஞ் செய்து கொடுத்து,
தன் வளநாடு வாங்கினான் - தனது வளப்ப மிக்க நாட்னைப் பெற்றுக்
கொண்டான்.