392திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



இதிற் கூறிய கௌரியனாகிய கூன் பாண்டியனுக்கு நெடுமாறன் என்பது
பெயரென்பதும், இவன் நெல்வேலியில் நிகழ்ந்த போரிலே மாற்றாரை
வென்றவன் என்பது

"நிறைக்கொண்ட சிந்தையா னெல்வேலி வென்ற
நின்றசீர் நெடுமாற னடியார்க்கு மடியேன்."

என்னும் திருத்தொண்டத் தொகையால் அறியப்படும். இவ்வரசன் சேர
சோழர்களை வென்று அடிப்படுத்தவன் என்பது இறையனாராகப்பொருளுரை
மேற்கோட் செய்யுள்கள் முதலியவற்றால் அறியப்படுகின்றன.
இவ்வேந்தனுடன் நெல்வேலியில் எதிர்த்த பகைஞர் தமிழ் நாட்டின்
வடக்கிலுள்ளவர் என்பது,

"ஆயவர சளிப்பார்பா லமர்வேண்டி வந்தேற்ற
சேயபுலத் தெவ்வரெதிர் நெல்வேலிச் செருக்களத்துப்
பாயபடைக் கடன்முடுகும் பரிமாவின் பெருவெள்ளம்
காயுமதக் களிற்றினிரை பரப்பியமர் கடக்கின்றார்."

"இனையகடுஞ் சமர்விளைய விகலுழந்த பறந்தலையிற்
பனைநெடுங்கை மதயானைப் பஞ்சவனார் படைக்குடைந்து
முனையழிந்த வடபுலத்து முதன்மன்னர் படைசரியப்
புனையுநறுந் தொடைவாகை பூழியர்வேம் புடன்புனைந்து."

என்னும் திருத்தொண்டர் புராணச் செய்யுட்களாலும், சாசனங்களாலும்
அறியப்படுகின்றது. அரிகேசரி மாறவன்மன் என்று கூறப்படும் இந்
நெடுமாறன் கி. பி. 667-க்கு முன் ஆட்சி புரிந்தோன் என்பது சாசனங்களால்
அறியப்படுதலின் இவனுடன் நெல்வேலியில் எதிர்த்த வடபுல வேந்தன்
சளுக்க மன்னனாகிய இரண்டாம் புலிகேசியோ, அன்றி அவன் மகனாகிய
முதலாம் விக்கிரமாதித்தனோ ஆதல் வேண்டும் என்க. மங்கையர்க்கரசியார்
சோழன் மகளார் என்பது மானி என்னும் பெய ருடையார் என்பதும்

"மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை
வரிவளைக் கைம்மட மானி."

என்னும் திருஞான சம்பந்தர் திருவாக்கானும், பெரிய புராணம்
முதலியவற்றானும் பெறப்படும். (6)

                 [- வேறு]
வளவர்கோன் செழியன் கற்பின் மங்கையர்க் கரசி யாருக்
களவறு நிதியுஞ் செம்பொற் கலிங்கமு மணியும் போகம்
விளைநில மனைய வாய வெள்ளமும் பிறவுந் தென்னன்
உளமகிழ் சிறப்ப வேந்தர் வரிசையா லுதவிப் பின்னர்.