வலையாக்கி நயம்படக்
கூறினார். சைவ நெறி நின்று சிவனது திருவருள்
கூடும் நல்வினை முன்பு செய்துள்ளானாயினும் அஃது இப்பொழுது கூடிற்றில
தென்பார் நல்வினை உதவா என்றார். நான்மறை ஒழுக்கம் - வைதிக சைவ
வொழுக்கம். வல்வினை வலியால் வலையிற் பட்டு ஒழுக்கம் நீத்தான் என
இயைக்க. (10)
போதவிழ்
தாரா னக்கர் புன்னெறி யொழுக்கம் பூண்டோ
னாதலிற் கன்னி நாடு மமணிருண் மூழ்கிப் பூதி
சாதன நெறியாஞ் சைவ சமயமு முத்திச் செல்வ
மாதவ நெறியுங் குன்ற மறைந்தது வேத நீதி. |
(இ
- ள்.) போது அவிழ்தாரான் - மலர் விரிந்த மாலையை யணிந்த
பாண்டியன், நக்கர் புல் நெறி ஒழுக்கம் பூண்டோன் ஆதலின் - அருகரது
புல்லிய மதத்தின் ஒழுக்கங்களை மேற்கொண்டானாதலினால், கன்னி நாடும்
அமண் இருள் மூழ்கி - பாண்டி நாடும் சமண இருளில் அழுந்தப் பெற்று,
பூதிசாதன நெறியாம் சைவசமயமும் - பூதிசாதன நெறியாகிய சைவ சமயமும்,
முத்திச் செல்வம் மாதவ நெறியும் குன்ற - வீடுபேறாகிய செல்வத்தை
அடைவிக்கும் பெரிய தவவொழுக்கமும் குறைவுபட, வேத நீதி மறைந்தது -
வேத நெறி மறைந்தது.
அரசன்
வழிப்பட்டது உலக மாதலின் கன்னி நாடும் அமணிருள்
மூழ்கிற்று என்க. பூதி சாதனம் - திரு நீறாகிய சாதனம்; திரு நீறும்
உருத்திராக்கம் முதலிய சாதனமும் என்றுமாம். மாதவ நெறி - சரியை,
கிரியை, யோகம், ஞானம் என்னும் நெறிகள். வேதநீதி - வேத
சிவாகமங்களிற் கூறப்பட்ட விதி விலக்கு முறைமை. சிவாகமமும்
வேதமெனப்படும் எனவுணர்க. (11)
பறிபடு தலையும்
பாயி னுடுக்கையும் பாசிப் பல்லும்
உறிபொதி கலனு மத்தி நாத்தியென் றுரைக்கு நாவும்
அறிவழி யுளம்போ னாணற் றழிந்தவெற் றரையுங் கொண்டு
குறிகெடு மணங்கு சூழ்ந்தாங் கமணிறை கொண்ட தெங்கும். |
(இ
- ள்.) பறிபடுதலையும் - மயிர் பறிக்கப்பட்டதலையும், பாயின்
உடுக்கையும் - பாயாகிய உடையும், பாசிப்பல்லும் - பசுமை படர்ந்த பல்லும்,
உறி பொதி கலனும் - உறியிற் பொதிந்த கமண்டலமும், அத்தி நாத்தி என்று
உரைக்கும் நாவும் - உண்டாம் இல்லையாம் என்று கூறும் நாவும், அறிவு
அழி உளம் போல் - அறிவழிந்த உள்ளம் போல், நாண் அற்று அழிந்த
வெற்று அரையும் கொண்டு - வெட்கம் சிறிதுமின்றி அழிந்த ஆடையில்லாத
அரையும் உடையதாய், குறிகெடும் அணங்கு சூழ்ந்தாங்கு - பொலி விழந்த
தவ்வை சூழ்ந்து தங்கினாற் போல, அமண் எங்கும் இறை கொண்டது -
சமண் எங்குஞ் சூழ்ந்து தங்கியது.
பாசிப்பல்
- விளக்காமையால் அழுக்கேறிப் பசுமை படர்ந்த பல்.
அத்தி - உண்டு. நாத்தி - இல்லை. ஆருகதர் சீவன் முதலாகக் கூறும்
பதார்த்தங்கள் உண்டோ இல்லையோ என வினாவிய வழி, உண்டாம்,
|