396திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



இல்லையாம், உண்டும் இல்லையுமாம், சொல்லொணாததாம், உண்டுமாம்
சொல்லொணாததுமாம், இல்லையுமாம் சொல்லொணாததுமாம், உண்டும்
இல்லையுமாம் சொல்லொணாததுமாம் என எழு வகையான் இறுப்பர்; இவை
யெல்லாம் உண்டு, இல்லை என்னும் இருவாய்பாட்டுள் அடங்குதலின் ‘அத்தி
நாத்தி யென்றுரைக்கு நாவும்’ என்றார். நாண் அற்று அழிந்த என்பதற்கு
அரை ஞாணின்றிப் பீடழிந்த என்றும் உரைத்துக் கொள்க. குறிகெடும்
அணங்கு - மூதேவி; பேயுமாம். அமண், குழுஉப் பெயர். இறை கொள்ளல் -
தங்கல். (12)

அருந்தமிழ்ப் பாண்டி வேந்தற் குறுதியா யாக்கஞ் செய்யும்
மருந்தினிற் சிறந்த கற்பின் மங்கையர்க் கரசி யாரும்
பெருந்தகை யமைச்சு நீரிற் குழைத்தன்றிப் பிறங்கப் பேறு
தருந்திரு நீறிடா ராய்ச் சிவனடிச் சார்பி னின்றார்.

     (இ - ள்.) அருந்தமிழ்ப் பாண்டி வேந்தற்கு - அரிய தமிழையுடைய
பாண்டி மன்னனுக்கு, உறுதியாய் ஆக்கம் செய்யும் மருந்தினில் சிறந்த -
பற்றுக் கோடாக நின்று வீடு பேறாகிய செல்வத்தை அளிக்கும் அமிழ்
தொன்று உளதேல் அதனினும் சிறந்த, கற்பின் மங்கையர்க்கரசியாரும் -
கற்பின் மிக்க மங்கையர்க்கரசியாரும், பெருந்தகை அமைச்சும் - பெரிய
தகுதியை யுடைய மந்திரியாராகிய குலச்சிறையாரும், பேறுதரும் திருநீறு -
எல்லாப் பேற்றினையும் அளிக்குந் திருநீற்றினை, நீரில் குழைத்தன்றி - நீரிற்
குழைத்து வெளியே தோன்றா வண்ணம் இடுதலேயன்றி, பிறங்க இடாராய் -
வெளித் தோன்றுமாறு இடாதவராய், சிவன் அடிச் சார்பில் நின்றார் -
சிவபெருமானது திருவடிச் சார்பில் நின்றனர்.

     ஆக்கஞ் செய்யும் மங்கையர்க் கரசியார் எனவும், மருந்தினிற் சிறந்த
கற்பு எனவும் கூட்டி யுரைத்தலுமாம். திரு நீறு பிறங்க இடாமை,

"ஓங்கிய சைவ வாய்மை யொழுக்கத்தி னின்ற தன்மை
பூங்கழற் செழியன் முன்பு புலப்படா வகைகொண் டுய்த்தார்ழு

எனத் திருத் தொண்டர் புராணங் கூறுதலானும் பெறப்படுதல் காண்க.
அடிச் சார்பில் நின்றார் - திருவடியே பற்றுக் கோடாக நின்றார். (13)

பொய்யுரை பிதற்று மிந்தப் புன்சமண் களைகட் டீண்டு
மெய்யுரை வேத நீதி வியன்பயிர் தலைச்செய் தோங்கச்
செய்யுந ரெவரோ வென்று* சிந்தையிற் கவலை பூண்டு
நையுந ராகிக் கூட னாதனை வணங்கப் போனார்.

     (இ - ள்.) ஈண்டு - இவ்விடத்தில், பொய் உரை பிதற்றும் இந்தப்
புன் சமண் களை கட்டு - பொய் மொழியைப் பிதற்றுகின்ற இந்தப் புல்லிய
சமணாகிய களையினைப் பிடுங்கி, மெய் உரை வேதநீதி வியன் பயிர் தலைச்
செய்து ஓங்க உண்மையை உரைக்கும் வேத நெறி என்னுஞ் சிறந்த


     (பா - ம்.) * எவரே யென்று.