பாண்டியன் சுரந் தீர்த்த படலம்397



பயிர் தலையெடுத்து ஓங்குமாறு, செய்யுநர் எவரோ என்று - செய்யவல்லுநர்
எவரோ என்று கருதி, சிந்தையில் கவலை பூண்டு நையுநராகி - மனத்திற்
கவலையை மேற் கொண்டு நைதலையுடையராய் கூடல் நாதனை வணங்கப்
போனார் - கூடலிறைவனாகிய சோம சுந்தரக் கடவுளை வணங்குதற்குச்
சென்றனர்.

     பிதற்றல் - முன்னொடு பின் மலைவுபடக் கூறல். கட்டு - பிடுங்கி. (14)

பேதுற்ற முனிவர்க் கன்று பெருமறை விளக்கஞ் செய்த
வேதத்தின் பொருளே யிந்த வெஞ்சமண் வலையிற் பட்டுப்
போதத்தை யிழந்த வேந்தன் புந்தியை மீட்டிப் போதுன்
பாதத்தி லடிமை கொள்வா யென்றடி பணியு மெல்லை.

     (இ - ள்.) பேதுற்ற முனிவர்க்கு அன்று - பொருள் தெரியாமல்
மயங்கிய முனிவர்களுக்கு அந்நாளில், பெருமறை விளக்கம் செய்த
வேதத்தின் பொருளே - பெரிய வேதத்திற்குப் பொருள் விளக்கிய
மறைப்பொருளே, இந்த வெம் சமண் வலையில் பட்டு - இந்தக்கொடிய
சமணாகிய வலையிற்பட்டு, போதத்தை இழந்த வேந்தன் - அறிவினை இழந்த
அரசனது, புந்தியை மீட்டு - புத்தியைத் திருப்பி, இப்போது உன் பாதத்தில்
அடிமை கொள்வாய் என்று - இப்போது உனது திருவடிக்கு அடிமை யாக்கிக்
கொள்வா யென்று குறையிரந்து, அடிபணியும் எல்லை - திருவடியை
வணங்கும் போது.

     பேதுறல் - மயங்கல். வேதப் பொருளறியாது மயங்கிய முனிவர்க்கு
அதனைத் தெளிவித்த நீரே சமண் வலையிற் பட்டு மயங்கிய அரசனுக்கும்
உண்மை விளக்கம் செய்யவல்லீர் என்பார் ‘பெருமறை விளக்கஞ் செய்த
வேதத்தின் பொருளே’ என விளித்தாராகலின் இது கருத்துடையடை
கொளியணி. (15)

வேதிய னொருவன் கண்டி வேடமும் பூண்டோன் மெய்யிற்
பூதியன் புண்டரீக புரத்தினும் போந்தோன் கூடல்
ஆதியைப் பணிவான் வந்தான் மங்கையர்க் கரசி யாரும்
நீதிய வமைச்ச ரேறு நேர்பட வவனை நோக்கா.

     (இ - ள்.) புண்டரீக புரத்தினும் போந்தோன் - புலியூராகிய
சிதம்பரத்தி னின்றும் வந்தவனாகிய, வேதியன் ஒருவன் -
மறையவனொருவன், கண்டி வேடமும் பூண்டோன் - உருத்திராக்கமணிந்த
திருவேடமுமுடையவனாய், மெய்யில் பூதியன் - உடலில் திருநீறு
தரித்தவனாய், கூடல் ஆதியைப் பணிவான் வந்தான் - கூடலிறைவனாகிய
சோமசுந்தரக் கடவுளை வணங்கத் திருக்கோயிலுக்கு வந்தனன்;
மங்கையர்க்கரசியாரும் நீதிய அமைச்சர் ஏறும் - மங்கையர்க்கரசியாரும்
நீதியை யுடைய அமைச்சருள் ஏறு போல்வாராகிய குலச்சிறையாரும்,
அவனை நேர்பட நோக்கா - அவனை நேரிற் கண்டு.

     புரத்தினும் - புரத்தினின்றும்; வருஞ் செய்யுளில் நாட்டினும் என்பதும்
இத்தகைத்து. பணிவான், வினை யெச்சம். (16)