பாண்டியன் சுரந் தீர்த்த படலம்399



இளஞ் சூரியனைப்போல அவதரித்தான்; செல்வனுக்கு இரண்டு ஆண்டு
எல்லை போயபின் - அச் செல்வனுக்கு இரண்டு ஆண்டின் அளவு
போனபின், மூன்றாம் ஆண்டில் - மூன்றாவது ஆண்டின் கண், பொருகடல்
மிதந்த தோணி நாயகன் - அலைகள் மோதும் கடலின் மேல் மிதந்த
தோணிபுரத்து இறைவன், பிராட்டியோடும் விடையின் மேல் நடந்து -
இறைவியுடன் ஆனேற்றி லேறி வந்து, நங்கை - அப்பிராட்டியினது.

.      பிரளய காலத்தில் நீரின்மீது தோணிபோல் மிதந்தமையால்
தோணிபுரம் எனப் பெயர் பெற்ற பதி என்பார் ‘பொருகடன் மிதந்த
தோணி’ என்றார். (19)

திருமுலைப் பாலி னோடு ஞானமுந் திரட்டிச் செம்பொற்
குருமணி வள்ளத் தேந்திக் கொடுப்பவப் பாலன் வாங்கிப்
பருகியெண் ணிறந்த வேதா கமமிவை பற்றிச் சார்வாய்
விரிகலை பிறவு மோதா துணர்ந்தனன் விளைந்த ஞானம்.

     (இ - ள்.) திருமுலைப்பாலினோடு ஞானமும் திரட்டி -
திருமுலைப்பாலுடன் சிவஞானத்தையும் குழைத்து, செம்பொன் குருமணி
வள்ளத்து ஏந்திக் கொடுப்ப - சிவந்த பொன்னாலாகிய நிறம் பொருந்திய
மணிகள் பதித்த கிண்ணத்திலேந்திக் கொடுத்தருள, அப்பாலன் வாங்கிப்
பருகி - அப்பாலன் அதனை வாங்கி அருந்தி (அதனால்), எண் இறந்த வேத
ஆகமம் - அளவிறந்த மறைகளையும் ஆகமங்களையும், இவை சார்வாய்
பற்றி விரிகலை பிறவும் - இவற்றைப் பற்றிச் சார்பு நூல்களாக விரிந்த பிற
கலைகளையும், ஓதாது உணர்ந்தனன் - ஓதுதலின்றியே உணர்ந்தனன்;
ஞானம் விளைந்த - ஞானங்கள் விளைந்தன.

     இறைவன் ஆணையால் இறைவி ஊட்டினளாகலின் அதனை இறைவன்
மீது ஏற்றிக் கூறினார். பருகி, காரணப் பொருட்டாய வினை யெச்சம்.
சார்வாய் விரி கலை - வேதாங்கம், புராணம் முதலாயின. விரிகலையும்
பிறவும் என்றுமாம்.

"சிவனடியே சிந்திக்குந் திருப்பெருகு சிவஞானம்
பவமதனை யறமாற்றும் பாங்கினிலோங் கியஞானம்
உவமையிலாக் கலைஞான முணர்வரிய மெய்ஞ்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தா ரந்நிலையில்ழு

என்று திருத்தொண்டர் புராணங் கூறுமாறு அனைத்து ஞானமும் எய்தப்
பெற்றா ராகலின் ‘விளைந்த ஞானம்’ எனப் பன்மை கூறினார். பிள்ளையார்
மூன்றாம் ஆண்டில் ஞானம் பெற்ற வரலாற்றைப் பெரிய புராணத்தால்
விளங்க வறிக. (20)

நம்பந்த மறுப்போன் ஞான நாயகன் ஞானத் தோடு
சம்பந்தஞ் செய்து ஞான சம்பந்த னாகி* நாவில்
வம்பந்த முலைமெய்ஞ் ஞான வாணியுங் காணி கொள்ள
அம்பந்த மறைக ளெல்லா மருந்தமி ழாகக் கூறும்.

     (பா - ம்.) * செய்யு ஞானசம்பந்தனாக.