தங்கள்பேர்
தீட்டி யோலை விண்ணப்பஞ் சண்பை நாடர்
புங்கவர்க் குணர்த்த வந்தப் பூசுரன் கையிற் போக்கி
மங்கையர்க் கரசி யாரு மரசற்கு மருந்தன் னானும்
அங்கயற் கண்ணி கோனைப் பணிந்துதம் மகத்தி்ற் புக்கார். |
(இ
- ள்.) சண்பைநாடர் புங்கவர்க்கு உணர்த்த - காழி நாட்டினர்
தலைவராகிய திருஞான சம்பந்தருக்குத் தெரிவிக்க, ஓலை விண்ணப்பம்
தங்கள் பேர் தீட்டி - விண்ணப்ப ஓலை யொன்று தங்கள் பேராலெழுதி,
அந்தப் பூசுரன் கையில் போக்கி - அம்மறையவன் கையிற் கொடுத்து
அவனை அனுப்பி, மங்கையர்க்கரசியாரும் அரசற்கு மருந்து அன்னானும் -
மங்கையர்க்கரசியாரும் மன்னனுக்கு அமிழ்தினை யொத்த குலச்சிறையாரும்,
அங்கயற் கண்ணி கோனைப் பணிந்து தம் அகத்தில் புக்கார் - அங்கயற்
கண்ணி தலைவனைப் பணிந்து தமது இல்லிற் சென்றனர்.
விண்ணப்ப
ஓலை தங்கள் பேரால் தீட்டி என்க. பதியும் நாடு
எனப்படுதல் வழக்கு. புங்கவர் உயர்ந்தோர்; தலைவர். அரசன்
உடற்பிணியும் உயிர்ப்பிணியும் நீங்கி உறுதி யெய்துதற்குக்
காரணராகலின்அரசற்கு மருந்தன்னான் என்றார். (26)
பண்படு வேதச் செல்வன் வல்லைபோய்ப் பழன வேலிச்
சண்பையார் பிரானைக் கண்டு பறியுண்டு தலைக ளெல்லாம்
புண்படத் திரியுங் கையர் பொய்யிருள் கடந்தார் தந்த
எண்படு மோலை காட்டிப் பாசுர மெடுத்துச் சொன்னான். |
(இ
- ள்.) பண்படு வேதச் செல்வன் - பண்ணமைந்த மறைச்
செல்வனாகிய அவ்வந்தணன், வல்லைபோய் - விரைந்து சென்று, பழன
வேலி சண்பையர் பிரானைக் கண்டு - கழனிகள் சூழ்ந்த காழியின்
வேந்தராகிய திருஞானசம்பந்தரைத் திருமறைக்காட்டிற் கண்டு, தலைகள்
எல்லாம் புண்படப் பறியுண்டு திரியும் கையர் - தலைகள் முழுதும்
புண்படுமாறு மயிர்கள் பறிக்கப்பட்டுத் திரியும் கீழ்மக்களாகிய சமணர்களின்,
பொய் இருள் கடந்தார் தந்த - பொய் நெறியாகிய இருளினைக் கடந்த
மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாருங் கொடுத்த, எண்படும்ஓலை காட்டி -
மதிக்கத்தகும் ஓலையினைக் காட்டி, பாசுரம் எடுத்துச் சொன்னான் -
அதிலுள்ள பாசுரத்தை எடுத்துக் கூறினான்.
திருஞான
சம்பந்தர் திருமறைக்காட்டில் எழுந்தருளி யிருத்தலை
அரசியாரும் அமைச்சரும் கேள்வியுற்றுப் பரிசனங்களை விடுக்க அவர்கள்
சென்று அப்பதியிற் கண்டு வணங்கி அவர்கள் விண்ணப்பத்தைத்
தெரிவித்தனரெனப் பெரிய புராணங் கூறும். பாசுரம் - திருமுகவாசகம்.
பிள்ளையார் கட்டளையால் எடுத்துச் சொன்னான் என்க. (27)
[எழுசீரடியாசிரிய
விருத்தம்] |
வெங்குரு
வேந்த ரடிபணிந் தடியேன் குலச்சிறை விளம்புவிண்
ணப்பம்
இங்கெழுந் தருளிச் சமணிரு ளொதுக்கி யெம்மிறை மகற்குநீ
றளித்துப்
பொங்கிரும் பணைசூழ் தென்றமிழ் நாட்டைப் பூதிசா தனவழி
நிறுத்தி
எங்களைக் காக்க வென்றபா சுரங்கேட் டெழுந்தனர் கவுணியர்க்
கிறைவர்.
|
|