சங்கப்பலகை தந்த படலம்41



என வெண்பாமாலையிற் கூறப்பட்ட எண்வகை யியல்பினை
உடைத்தாயிருத்தல். போலும் : ஒப்பில் போலி. (19)

திங்களங் கண்ணி வேய்ந்த செக்கரஞ் சடில நாதன்
மங்கலம் பெருகு கோயில் வடகுட புலத்தின் மாடோர்
சங்கமண் டபமுண் டாக்கித் தகைமைசால் சிறப்பு நல்கி
அங்கமர்ந் திருத்தி ரென்ன விருத்தினா னறிஞர் தம்மை.

     (இ - ள்.) திங்கள் அம் கண்ணி வேய்ந்த - சந்திரனாகிய அழகிய
மாலையை யணிந்த, செக்கர் அம் சடிலநாதன் - சிவந்த அழகிய
சடையையுடைய சோமசுந்தரக் கடவுளின், மங்கலம் பெருகு கோயில் -
மங்கலம் மிக்க திருக்கோயிலின், வடகுடபுலத்தின் மாடு - வடமேற்றிசைப்
பக்கத்தில், ஓர் சங்கமண்டபம் உண்டாக்கி - ஒரு சங்கமண்டபம் எடுத்து,
தகைமைசால் சிறப்பு நல்கி - தகுதிநிறைந்த பலவரிசைகளை அளித்து,
அங்கு அமர்ந்து இருத்திர் என்ன இருத்தினான் அறிஞர் தம்மை - அங்கே
தங்கி யிருப்பீராக என்று அப்புலவர்களை இருத்தினான்.

     அமர்ந்திருத்திர் என்பதற்கு விரும்பி யுறைவீர் என்றுரைத்தலுமாம். (20)

வண்டமிழ் நாவி னார்க்கு மன்னவன் வரிசை நல்கக்
கண்டுளம் புழுங்கி முன்னைப் புலவரக் கழகத் தோரை
மண்டினர் மூண்டு மூண்டு வாதுசெய் தாற்றன் முட்டிப்
பண்டைய புலனுந் தோற்றுப் படருழந் தெய்த்துப் போனார்.

     (இ - ள்.) வண்தமிழ் நாவினார்க்கு - வளவிய தமிழையுடைய
செந்நாப் புலவர்கட்கு, மன்னவன் வரிசை நல்க - பாண்டியன்
பலவரிசைகளை அளிக்க (அதனை), முன்னைப் புலவர் கண்டு உளம்
புழுங்கி - பழைய புலவர்கள் கண்டு உள்ளம் வெந்து, அக்கழகத்தோரை -
அச்சங்கப் புலவரை, மண்டினர் மூண்டு மூண்டு வாது செய்து - நெருங்கிச்
சென்று சென்று வாது புரிந்து, ஆற்றல் முட்டிப் பண்டைய புலனும் தோற்று
- தங்கள் ஆற்றல் குன்ற முன்னுள்ள புலமையையும் இழந்து, படர் உழந்து
எய்த்துப் போனார் - துன்புற்று மனமிளைத்துச் சென்றனர்.

     மண்டினர் : முற்றெச்சம். அடுக்கு தொழிற் பயில்வுப் பொருட்டு.
முட்டி : செயவெனெச்சத் திரிபு. பழைய புலமை இழுக்குற்றமையால்
‘பண்டைய புலனுந் தோற்று’ என்றார். (21)

இனையர்போல் வந்து வந்து மறுபுலத் திருக்குங் கேள்வி
வினைஞரு மதமேற் கொண்டு வினாய்வினாய் வாதஞ் செய்து
மனவலி யிளைப்ப வென்று கைகுவோ ரொன்றை வேண்டிப்
புனையிழை பாக நீங்காப் புலவர்மு னண்ணி னாரே.