மங்கலமரபின் வந்தாள்
வருத்தமும் - தமது மங்கலமாகிய மரபிற்றோன்றிய
மங்கையர்க்கரசியாரின் வருத்தத்தையும், காண அஞ்சி, செங்கதிரவன் போய்
- சிவந்த கிரணங்களை யுடைய சூரியன் சென்று. மேலைச் செழுங்கடல்
வெள்ளத்து ஆழ்ந்தான் - மேற்குத் திசையிலுள்ள செழிய கடற்
பெருக்கிலழுந்தினன்.
கருதருஞ்,
செயல் - மனத்தால் நினைத்தற்குமரிய கொடுஞ் செயல்.
சூரியனையும் அவன் மரபினர் பிறரையும் கருதித் தங்கள் என்றார்.
ஆதித்தர் பன்னிருவரென்பது பற்றித் தங்கள் என்றார் எனலுமாம்.
இயல்பிலே அத்தமித்த சூரியனை அமணர் செயலும் மரபின் வந்தாள்
வருத்தமும் காண அஞ்சிக்கடல் வெள்ளத்தாழ்ந்தான் என்றமையால் இது
தற்குறிப்பேற்ற அணி. (40)
மாறுகொ ளமணர் செய்யும் வஞ்சனைக் கிடனா யொத்து
வேறற நட்புச் செய்வான் வந்தென விரிந்த கங்குல்
ஈறற முளைத்த வான்மீ னினமவர் பறித்த சென்னி
ஊறுபட் டெழுந்த மொக்கு ளொத்தவக் கங்குலெல்லை. |
(இ
- ள்.) மாறுகொள் அமணர் செய்யும் வஞ்சனைக்கு இடனாய் -
மாறு பாட்டினைக் கொண்ட சமணர்கள் புரியும் வஞ்சவினைக்கு இடமாகி,
வேறு அற ஒத்துநட்புச் செய்வான் வந்தென - வேறுபாடு நீங்க ஒன்றுபட்டு
நட்புச் செய்ய வந்தாற்போல, கங்குல் விரிந்தது - இருள் வந்து பரவியது;
அக்கங்குல் எல்லை - அவ்விரவின்கண், ஈறு அறமுளைத்த வான் மீன்
இனம் - முடிவு இல்லையாாக முளைத்த விண்மீன் கூட்டங்கள், அவர் பறித்த
சென்னி - அவர்களுடைய மயிர் பறிக்கப் பட்ட தலைகளில், ஊறுபட்டு
எழுந்த மொக்குள் ஒத்த - புண்பட்டு எழுந்த கொப்புளங்களை ஒத்தன.
செய்வான்,
வினையெச்சம். வந்தென, விகாரம். விரிந்தது என்னும்
வினைமுற்றின் இறுதி தொக்கது. ஈறு அற - அளவில்லையாக என்றபடி. (41)
[கலிநிலைத்துறை.]
|
வைதி கத்தனி
யிளஞ்சிறு மடங்கலே றடைந்த
செய்தி யைத்தெரிந் தயன்மலை யிடங்களிற் றிரண்ட
கைத வத்தவெண் ணாயிரங் கயவரு மொருங்கே
எய்தி முத்தமிழ் விரகர்மேற் பழித்தழ லிழைத்தார். |
(இ
- ள்.) வைதிகம் தனி இளஞ் சிறு மடங்கலேறு -வேதநெறியிற்
செல்லும் ஒப்பற்ற மிக்க இளமையையுடைய சிங்கவேறுபோல்வாராகிய
திருஞானசம்பந்தர், அடைந்த செய்தியைத் தெரிந்து - அப்பதிக்கு வந்து
சேர்ந்த செய்தியை அறிந்து, அயல் மலை இடங்களில் திரண்ட -
பக்கங்களிலுள்ள மலையிடங்களிற் கூடியுள்ள, கைதவத்த எண்ணாயிரம்
கயவரும் - வஞ்சக வொழுக்கத்தையுடைய எண்ணாயிரங் கயவர்களும்,
ஒருங்கே எய்தி - ஒரு சேர மதுரைக்கு வந்து, முத்தமிழ் விரகர்மேல்
|