பாண்டியன் சுரந் தீர்த்த படலம்413



     (இ - ள்.) ஈனர்தாம் சடத் தீயினை எடுத்தனர் ஏகி - கீழோராகிய
அச் சமணர் தாமே சடமாகிய நெருப்பினை எடுத்துச் சென்று, ஞான
போனகர் மடத்தினில் செருகினார் - சிவஞானத்தை அமுது செய்த
பிள்ளையார் இருக்குந் திருமடத்திற் செருகினர்; ஆன தீப்புகை நந்தாது
எழுவதை - அதனாலாகிய நெருப்பின் புகைகுறைவு படாது மேலெழுவதை,
அடியவர் கண்டு - அடியார்கள் பார்த்து, வான நாயகன் மைந்தருக்கு
வல்லைஉணர்த்தினார் - வீட்டுலகிற்குத் தலைவனாகிய இறைவனது திருப்
புதல்வருக்கு விரைய அறிவித்தனர்.

     சடத்தீ - பூதாக்கினி. ஞான போனகர் - சிவஞானமாகிய உணவினை
யுண்டவர். வானவர்க்கு நாயகன் என்றுமாம். (44)

சிட்டர் நோக்கியத் தீயினைத் தென்றமிழ்க் கூடல்
அட்ட மூர்த்தியை யங்கிருந் தருமறைப் பதிகந்
துட்டர் பொய்யுரை மேற்கொண்டு தொன்முறை துறந்து
விட்ட வேந்தனைப் பற்றெனப் பாடினார் விடுத்தார்.

     (இ - ள்.) சிட்டர் அத்தீயினை நோக்கி - மேலோராகிய பிள்ளையார்
அந் நெருப்பினைப் பார்த்து, அங்கு இருந்து - அங்கு இருந்த வண்ணமே,
துட்டர் பொய் உரைமேற் கொண்டு - தீச் செயலையுடையவர்களாகிய
சமணர்களின் பொய் மொழியை மேற் கொண்டு, தொல் முறை துறந்து விட்ட
வேந்தனைப் பற்று என - பழைய முறைகளைக் கைவிட்ட மன்னனைப்
பையச் சென்று பற்றக் கடவை என, தென்தமிழ்க் கூடல் அட்ட மூர்த்தியை
- தமிழையுடைய தெற்கின் கண்ணுள்ள கூடலில் எழுந்தருளிய
அட்டமூர்த்தியாகிய சோமசுந்தரக் கடவுள்மேல், அருமறைப்பதிகம் பாடினார்
விடுத்தார் - அரிய தமிழ்மறைப் பதிகம் பாடி விடுத்தனர்.

     அட்ட மூர்த்தியைப்பாடி வேந்தனைப்பற்று என அத்தீயினை விடுத்தார்
எனக் கூட்டுக. நிலம் முதலிய எட்டு மூர்த்தங்களினும் உள்ளிருந்து அவற்றின்
செயல்களை நிகழ்விப்போன் இறைவனாகலின் அவனைப்பாடித் தீயினை
விடுத்தார் என்க. அரசன் முறை வழுவிய காரணத்தால் இது நிகழ்ந்ததாகலின்
பேரருளாளராகிய பிள்ளையார் சமணர்மீது தீயினை ஏவாது அரசன்மேல்
ஏவினர். பிள்ளையார் அப்பொழுது பாடிய பதிகம்,

"செய்ய னேதிரு வாலவாய் மேவிய
ஐய னேயஞ்ச லென்றருள் செய்யெனைப்
பொய்ய ராமம ணர்கொளு வுஞ்சுடர்
பையவே சென்று பாண்டியற் காகவே"

என்னும் திருப்பாட்டை முதலாக வுடையது. ‘அமணர் கொளுவுஞ் சுடர்
பையவே சென்று பாண்டியற்காக’ எனப் பிள்ளையார் பாடியதற்குரிய
காரணங்களை

"பாண்டிமா தேவியார் தமது பொற்பிற் பயிலுநெடு மங்கலநாண் பாது
                                                காத்தும்
ஆண்டகையார் குலச்சிறையா ரன்பி னாலு மரசன்பா லபராத முறுத
                                                லாலும்
மீண்டுசிவ நெறியடையும் விதியி னாலும் வெண்ணீறு வெப்பகலப்
                                               புகலி வேந்தர்
தீண்டியிடப் பேறுடைய னாத லாலுந் தீப்பிணியைப் பையவே செல்க
                                               வென்றார்"

என அருண்மொழித் தேவர்பாடிய அருமைச் செய்யுளாலறிக. (45)