414திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



அடுத்த தக்கணத் தரசனை வெப்புநோ யாகித்
தொடுத்த திட்டபல் கலன்களுந் துகளெழப் பனிநீர்
மடுத்த சாந்தமுங் கலவையு மாலையுங் கருகப்
படுத்த பாயலுஞ் சருகெழப் புரவலன் பதைத்தான்.

     (இ - ள்.) அக்கணத்து அரசனை அடுத்தது - (அத்தீயானது)
அவ்விநாடியிலே கூன்பாண்டியனை அடைந்து, வெப்பு நோய்
ஆகித்தொடுத்தது - சுர நோயாகிப் பற்றியது; (அதனால்), இட்ட
பல்கலன்களும் துகள்எழ - அவன் அணிந்த பல அணிகளும் பொரிந்து
தூளாகவும், பனிநீர் மடுத்த சாந்தமும் கலவையும் மாலையும் கருக - பனிநீர்
விட்டு மட்டித்த சந்தனமும் கூட்டுவர்க்கமும் மாலையுங் கருகித் தீயவும்,
படுத்த பாயலும் சருகுஎழ - படுத்திருக்கும் படுக்கையும் வெந்து சருகாகவும்,
புரவலன் பதைத்தான் - அவ்வேந்தன் பதைத்தனன்.

     அடுத்தது, முற்றெச்சம். துகளெழ முதலிய வினை யெச்சங்கள் நிகழ்
காலத்தில் வந்தன. துகளெழ, கருக, சருகெழத் தொடுத்தது என
முடித்தலுமாம். (46)

வளவர் கோன்றிரு மடந்தையு மந்திர ரேறுந்
தளர்வ டைந்துநன் மருத்துநூல் விஞ்சையர் தமைக்கூஉய்ப்
பளகில் பன்மருந் தருத்தவும் பார்வையி னாலும்
விளைவதே யன்றி வெஞ்சுரந் தணிவது காணார்.

     (இ - ள்.) வளவர் கோன் திரு மடந்தையும் - வளவர் கோன்
பாவையாகிய மங்கைர்க்கரசியாரும், மந்திரர் ஏறும் - அமைச்சரேறாகிய
குலச்சிறையாரும், தளர்வு அடைந்து - தளர்ச்சியுற்று, நல் மருத்து நூல்
விஞ்சையர் தமைக் கூய் - நல்ல மருத்துவ நூல் வல்லாரை அழைத்து -
பளகுஇல் பல் மருந்து அருத்தவும் - குற்றமில்லாத பல மருந்துகளை
அருத்துவதனாலும், பார்வையினாலும் - மந்திரித் தலினாலும், விளைவதே
அன்றி - மேலும் மேலும் முதிர்வதே யல்லாமல், வெஞ் சுரம் தணிவது
காணார் - கொடிய அவ்வெப்பு நோய் தணிவதைக் கண்டிலர்.

     கூவி என்பது விகாரமாற்று. அருத்தவும் - ஊட்டுதலினாலும். பார்வை
- மந்திரித்தல். விளைதல் - முதிர்தல். (47)

சவலை நோன்புழந் திம்மையு மறுமையுஞ் சாரா
அவல மாசரை விடுத்தன ரனைவரும் பார்த்துத்
தவவ லத்தினு மருந்தினுந் தணிந்தில தாகக்
கவலை யெய்தினா ரிருந்தனர் விடிந்தது கங்குல்.

     (இ - ள்.) சவலை நோன்பு உழந்து - உடல் மெலிதற் கேதுவாகிய
நோன்பினால் வருந்தி, இம்மையும் மறுமையும் சாரா - இம்மைப் பயனையும்
மறுமைப் பயனையும் அடையாத, அவலம்மாசரை விடுத்தனர் - தவவலியற்ற
இருவகை அழுக்கினையு முடைய சமணர்களை விடுத்தனர்; அனைவரும்
அவரனைவரும், தவவலியினும் மருந்தினும் பார்த்து தணிந்திலதாக - தமது
தவவன்மையினாலும் மருந்தினாலும் பார்த்தும் அந்நோய் தணியாதாக,
கவலை எய்தினார் இருந்தனர் - கவலையுற்று இருந்தனர்; கங்குல் விடிந்தது
- இரவு விடிந்தது.