பாண்டியன் சுரந் தீர்த்த படலம்415



    சவலை நோன்பு - சடுபாறையிற் கிடத்தல் முதலிய நோன்பு. அவலம் -
துன்பம் என்றுமாம். மாசர் அக வழுக்கும் புறவழுக்கு முடையவர். விடுத்தனர்
என்பதற்குப் பரிசனங்கள் என எழுவாய் வருவித்துக் கொள்க. அவரனை
வரும் எனச் சுட்டுப் பெயர் விரிக்க. தங்கள் மதத்திற்கு யாது தீங்கு
நேருமோ எனக் கவலை யெய்தின ரென்க. எய்தினார், முற்றெச்சம். (48)

வட்ட வாழியொன் றுடையதேர்ப் பரிதிதன் மருமான்
பெட்ட காதல்கூர் மருகனைப் பற்றிய பிணிகேட்
டிட்ட காரிரு ளெழினியை யெடுத்தெடுத் தங்கை
தொட்டு நோக்குவான் வந்தெனத் தொடுகடன் முளைத்தான்.

    (இ - ள்.) வட்ட ஆழி ஒன்று உடைய தேர்ப்பரிதி - வட்டமாகிய
உருள் ஒன்றையுடைய சூரியன், தன் மருமான் பெட்ட காதல் கூர்மருகனை
- தனதுவழித் தோன்றலாகிய சோழனால் விரும்பப்பட்ட அன்பு மிக்க
மருமகனாகிய பாண்டியனை, பற்றிய பிணிகேட்டு, தொடுத்த நோயினைக்
கேட்டு, இட்ட இருள் எழினியை - இடப்பட்ட கரிய இருளாகிய திரையினை,
எடுத்து எடுத்து அங்கை தொட்டு நோக்குவான் வந்தென - எடுத்துவிட்டு
அங்கையாற் றொட்டுப் பார்ப்பதற்கு வந்தாற்போல, தொடுகடல் முளைத்தான்
- தோண்டப்பட்ட கீழைக் கடலின்கண் தோன்றினான்.

    பெட்ட - விரும்பிய. இருள் சிறிது சிறிதாக நீங்குதலின் ‘எடுத்தெடுத்து’
என்றார். சகரர் தோண்டியது கீழ்கடலாதலின் ‘தொடுகடல்’ என்றார். (49)

வாலி தாகிய சைவவான் பயிரினை வளர்ப்பான்
வேலி யாகியோ ரிருவரும் வேந்தனை நோக்கிக்
கால பாசமுஞ் சுடுமிந்நோ யருமறைக் காழிப்
பால ராலன்றித் தீர்த்திடப் படாதெனப் பகர்ந்தார்.

;    (இ - ள்.) வாலிதாகிய சைவவான் பயிரினை வளர்ப்பான் - தூயதாகிய
சிறந்த சைவமாகிய பயிரினை வளர்த்தற்கு, வேலியாகியோர் இருவரும் -
வேலியாயுள்ள மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும், வேந்தனை நோக்கி
- அரசனைப் பார்த்து, காலபாசமும் சுடும் இந்நோய் - கூற்றுவனது
பாசத்தையும் வெதுப்பும் இப்பிணியானது, அருமறைக் காழிப் பாலரால்
அன்றி - அரிய தமிழ்மறையையுடைய காழிப் பிள்ளையாரால்
தீர்க்கப்படுமல்லாமல் ஏனையோரால், தீர்த்திடப்படாதெனப் பகர்ந்தார் -
நீக்கப்படாது என்று கூறினர்.

     புறச்சமயிகளாகிய பட்டிகளால் அழியாது பாதுகாப்பவரென்பார்
‘வேலியாகியோர்’ என்றார். காழியில் வந்த மறைப்பாலரால் என்க.
மறைப்பாலர் - அந்தணச் சேயும் ஆம். (50)