416திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



பொய்யர் சார்பினை விடாதவ னீங்குநீர் புகன்ற
சைவர் நீறிட்டுப் பார்ப்பது தகுவதோ வென்ன
ஐய நீயெனைத் திறத்தினா லாயினு நோய்தீர்ந்
துய்ய வேண்டுமே யிதனில்யா துறுதியென் றுரைத்தார்.

     (இ - ள்.) பொய்யர் சார்பினை விடாதவன் - பொய்யர்களாகிய
சமணர்களின் சார்பினைவிட்டு நீங்காத பாண்டியன், ஈங்கு நீர் புகன்ற சைவர்
- இப்பொழுது நீர் கூறிய அச்சைவர், நீறுஇட்டுப் பார்ப்பது தகுவதோ என்ன
- திருநீறிட்டு என்னைப் பார்ப்பது தகுவதொன்றோ என்று கூற, ஐய -
ஐயனே, நீ எனைத் திறத்தினால் ஆயினும் - நீ எந்த வகையினாலாவது,
நோய் தீர்ந்து உய்யவேண்டுமே - நோய் நீங்கிப் பிழைக்கவேண்டுமல்லவா,
இதனில் உறுதி யாது என்று உரைத்தார் - இதனினும் நன்மை யாது
உளதென்று உரைத்தனர்.

     நீர் புகன்ற - நும்மாற் கூறப்பட்ட. நீறு இட்டுப் பார்ப்பது - திரு நீறு
போட்டு நோய் தீர்ப்பது; திரு நீறு பூசி வந்து பார்ப்பது என்றுமாம்.
எனைத்து என்பது எனை என நின்றது. சைவர் நீறிடுதலால் உய்வது
உறுதியாமன்றி அது தகாதென மறுத்து உயிரிழப்பது உறுதியாகா தென்பார்
‘இதனில் யாது உறுதி’ என்றார் என்க. (51)

அழைமி னீண்டென வரசனு மிசைந்தன னார்வந்
தழையு மந்திரத் தலைமகன் றனிநக ரெங்கும்
விழவு தூங்கநன் மங்கல வினைகளால் விளக்கி
மழலை யின்றமிழ் விரகர்தம் மடத்தில்வந் தெய்தா.

     (இ - ள்.) ஈண்டு அழைமின் என அரசனும் இசைந்தனன் - இங்கு
அழையுங்கள் என்று அரசனும் உடன் பட்டனன்; ஆர்வம் தழையும் மந்திரத்
தலைமகன் - விருப்ப மிகும் அமைச்சர் தலைவனாகிய குலச்சிறையார்,
தனிநகர் எங்கும் விழவு தூங்க - ஒப்பற்ற நகர் முழுதும் திருவிழாப்
பொலிவுற, நல்மங்கலவினைகளால் விளக்கி - நல்ல மங்கலச் செயல்களால்
நகரை அலங்கரித்து, இன் மழலை தமிழ் விரகர் தம்மடத்தில் வந்து எய்தா
- இனிய மழலை மொழியினையுடைய முத்தமிழ் விரகர் எழுந்தருளிய திரு
மடத்தில் வந்து சேர்ந்து.

     அவர் உரைத்தமை கேட்டு அரசனும் இசைந்தனன் எனவும், அதனால்
ஆர் வந்தழையும் மந்திரத் தலைமகன் எனவும் விரித்துரைக்க. மங்கல
வினைகள் - கொடி யெடுத்தல், தோரணங் கட்டுதல், மாலை தூக்கல்
முதலாயின. மழலை போலும் இனிய தமிழ் என்றுமாம். (52)

அன்று கேள்வியா லருந்திய ஞானவா ரமுதை
இன்று கண்களா லுண்டுகண் பெற்றபே றெய்திச்
சென்றி றைஞ்சினா னெழுந்திருந் தீயமண் சூழ்ச்சி
வென்ற சிந்தையீ ரென்றனர் பூந்தராய் வேந்தர்.