பாண்டியன் சுரந் தீர்த்த படலம்421



     புண்ணியப்பை - நீற்றுப்பை. நோயது, அது பகுதிப்பொருள் விகுதி
கருதினாராக அதனை என்க. மாயநீறு - பொய்யாகிய நீறு; நீறு
அல்லது. (61)

அண்ட நாயகன் றிருமடைப் பள்ளிநீ றள்ளிக்
கொண்டு வாருமென் றருமறைக் கவுணியர் கூறக்
கண்டு காவல ரேவலர் கைக்கொடு வந்தார்
வண்டு லாவுதார் வழுதிநோய் தணிப்பவர் வாங்கி.

     (இ - ள்.) அண்டநாயகன் திருமடைப்பள்ளி நீறு - தேவநாயகனாகிய
சோமசுந்தரக் கடவுளின் திருமடைப்பள்ளியிலுள்ள சாம்பலை,
அள்ளிக்கொண்டு வாரும் என்று - அள்ளிக்கொண்டு வாருங்களென்று,
அருமறைக் கவுணியர் கூற - அரிய தமிழ்மறை பாடும் பிள்ளையார்
கூறியருள, காவலர் ஏவலர் கண்டு - மன்னன் ஏவலாளர் அதனைக்கேட்டு,
கைக்கொடு வந்தார் - கையிலள்ளிக் கொண்டு வந்தனர்; வண்டு உலாவுதார்
வழுதிநோய் தணிப்பவர் வாங்கி - வண்டுகள் உலாவும் மலர் மாலையை
யணிந்த பாண்டியனது பிணியினை நீக்கும் பிள்ளையார் அதனை வாங்கி.

     அண்டர் நாயகன் என்பது அண்ட நாயகன் என்றாயிற்று;
அண்டங்கட்கு நாயகன் என்றுமாம். (62)

மருந்து மந்திரம் யாவையு மறையுரைப் பதுவும்
பொருந்து மின்பவீ டளிப்பதும் போகமும் பொருளுந்
திருந்து மாலவா யான்றிரு நீறெனச் சிறப்பித்
தருந்து மின்னமு தனையசொற் பதிகம தறைந்து.

     மருந்து மந்திரம் யாவையும் - மருந்தும் மந்திரமும் முதலிய
அனைத்தும், மறை உரைப்பதுவும் - வேதத்தினால் உரைக்கப்படுவதும்,
பொருந்தும் இன்ப வீடு அளிப்பதும் - பொருந்திய இன்பினையுடைய
வீடுபேற்றினை அளிப்பதும், போகமும் பொருளும் - போகமாயுள்ளதும்
பொருளாயுள்ளதும், திருந்தும் ஆலவாயான் திருநீறு என சிறப்பித்து -
திருந்திய ஆலவாயான் திருநீறே யென்று சிறப்பித்து, அருந்தும் இன்அமுது
அனைய சொல்பதிகமது அறைந்து - உண்ணும் இனிய அமிழ்தினை யொத்த
சொற்களை யுடைய திருப்பதிகம் பாடியருளி.

     பதிகமது, அது பகுதிப்பொருள் விகுதி. பதிகம்,

"மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் றிருநீறே"

என்னும் திருப்பாட்டை முதலாகவுடைய திருநீற்றுப்பதிகம். இப்பதிகத்துள்,
"ஏல வுடம்பிடர் தீர்க்கு மின்பந்தருவது நீறு" என்பதனால் மருந்தும், "மந்திர
மாவது நீறு" என்பதனால் மந்திரமும், "வேதத்திலுள்ளது நீறு" என்பதனால்