தொட்ட பாகத்து எத்துணைத்
துன்பம் மிகுந்ததோ அத்துணை இன்பம்
பிள்ளையார் தொட்ட பாகத்து மிகுந்தது என இரண்டும் அளவால் ஒத்தமை
கூறியவாறாம். இருவினை யொப்பு என்பதற்கு நல்வினையும் தீவினையும்
ஓரளவினவாதல் என ஒரு சாரார் பொருள் கூறுவராகலின் அம்முறைபற்றி
இருவினை யொத்தபோல் என்றாார்.
"மன்னவன் மொழிவா னென்னே மதித்தவிக்
கால மொன்றில்
வெந்நர கொருபா லாகும் வீட்டின்ப மொருபா லாகும்
துன்னுநஞ் சொருபா லாகுஞ் சுவையமு தொருபா லாகும்
என்வடி வொன்றி லுற்றே னிருதிறத் தியல்பு மென்பான்" |
என்னும் பெரிய
புராணச் செய்யுளும் நோக்குக. (65)
ஐய விச்சுர
மாற்றரி தாற்றரி தென்னா
வையை நாடவன் வல்லமண் மாசுதீர்ந் தடியேன்
உய்ய வேண்டுமே லதனையு மடிகளே யொழித்தல்
செய்ய வேண்டுமென் றிரந்தனன் சிரபுரக் கோனை. |
(இ
- ள்.) வையை நாடவன் - வையை நாட்டினையுடைய பாண்டியன்
ஐய - ஐயனே, இச்சுரம் ஆற்றரிது ஆற்றரிது என்னா - இவ்வெப்பு நோய்
பொறுத்தற் கரியது பொறுத்தற்கரியது என்று கூறி, வல் அமண் மாசு தீர்ந்து
அடியேன் உய்யவேண்டுமேல் - வலிய அமணர்களின் சார்பாயுள்ள
குற்றத்தினின்றும் நீங்கி அடியேன் பிழைக்க வேண்டுமானால், அதனையும்
அடிகளே ஒழித்தல் செய்யவேண்டும் என்று - அவ்விடப்புறத்து
வெம்மையையும் அடிகளே நீக்கியருள வேண்டு மென்று, சிரபுரக்கோனை
இரந்தனன் - காழி வேந்தனைக் குறையிரந்து வேண்டினன்.
அடுக்கு
அச்சப் பொருட்டு. ஒழித்தல் செய்ய - ஒழிக்க. (66)
பிள்ளை
யாரிடப் பாகமும் பண்டுபோற் பெருமான்
வெள்ளை நீறுதொட் டங்கையா னீவுமுன் மேனாள்
உள்ள கூனொடு வெப்புநோ யொழிந்துமீ னுயர்த்த
வள்ளன் மாசறக் கடைந்தவிண் மணியெனப் பொலிந்தான். |
(இ
- ள்.) பிள்ளையார் - ஆளுடைய பிள்ளையார், இடப்பாகமும்
பண்டு போல் பெருமான் வெள்ளை நீறு தொட்டு - இடப்புறத்தையும்
முன்போலவே இறைவன் வெண்ணீற்றினைத் தொட்டு, அடங்கையால்
நீவுமுன் - அகங்கையாற் றடவிய வளவில், மேல்நாள் உள்ள கூனொடு
வெப்பு நோய் ஒழிந்து - முன்னரே இருந்த உடற் கூனுடன் வெப்பு நோயும்
நீங்கி, மீன் உயர்த்தவள்ளல் - மீனக் கொடி யுயர்த்திய வள்ளலாகிய
பாண்டியன், மாசுஅறக் கடைந்த விண்மணி எனப் பொலிந்தான் - குற்றம்
நீங்கக் கடையப்பட்ட சூரியனைப்போல விளங்கினான்.
|