சமணரைக் கழுவேற்றிய படலம்429



     (இ - ள்.) பேர் அருள் நிறைந்த காழிப்பெருந்தகையுடன் போய் - பெரிய அருள் நிறைந்த சீகாழிப் பெருந்தகையாராகிய பிள்ளையாருடன் சென்று, தம் கோன் சீர் அவை குறுகி - தமது அரசனது சிறந்த அவையினை அடைந்து, ஈது செப்புவார் - இதனைக் கூறுவார்; செய்ய கோலாய் - செங்கோலை யுடையாய், கார் அமண்காடே எங்கும் கழியவும் மிடைந்த - கரிய அமண்காடுகளே எங்கும் மிகவும் செறிந்தன; இன்ன வேரொடும் களைந்தால் - இவற்றை வேரோடும் அகழ்ந்தெறிந்தால், சைவ விளைபயிர் ஓங்கும் என்றார் - சைவமாகிய விளையும் பயிரானது ஓங்கி வளருமென்று கூறினர்.

     சமண்காட்டைக் களைந்தால் சைவப்பயிர் ஓங்கு மென்றமையால் இஃது இயைபுருவகவணி. (9)

அவ்வண்ணஞ் செய்வ தேயென் றரசனு மனுச்சை செய்யச்
செவ்வண்ண வெண்ணீற் றண்ண லனுச்சையுந் தெரிந்து தேயம்
உய்வண்ண மிதுவென் றங்ங னுண்மகிழ்ந் திருந்தார் நீண்ட
பைவண்ண வாரம் பூண்டார் புகழெங்கும் பரப்ப வல்லார்.

     (இ - ள்.) அவ்வண்ணம் செய்வது என்று அரசனும் அணுச்சை செய்ய அங்ஙனமே செய்கவென்று வேந்தனும் அனுமதிக்க, செவ்வண்ணம் வெண்ணீற்று அண்ணல் அனுச்சையும் தெரிந்து - செம்மேனியில் வெண்ணீ றணிந்து இறைவனது உடன்பாட்டையும் உணர்ந்து, தேயம் உய்வண்ணம் இது என்று உண் மகிழ்ந்து - நாடு உய்தி பெறுதற்குரிய காலம் இதுவே யென்று மனமகிழ்ந்து, நீண்ட பைவண்ண ஆரம்பூண்டார் - நீண்ட படத்தையுடைய அழகிய பாம்பாரமணிந்த இறைவரது, புகழ் எங்கும் பரப்ப வல்லார் அங்ஙன் இருந்தார் - புகழினை யாண்டும் பரவச் செய்ய வல்லுநராகிய பிள்ளையார் அங்கு இருந்தருளினார்.

     அனுச்சை - அனுமதி. அங்ஙன் - அவ்விடம் என்னும் பொருட்டு. (10)

         [கலிவிருத்தம்]
அந்த வேலை யருகந்தக் கையரைக்
குந்த வேற்கட் குலமட மாதரும்
மைந்த ராகிய மக்களுங் கண்ணழல்
சிந்த நோக்கி யிகழ்ந்திவை செப்புவார்.

     (இ - ள்.) அந்த வேலை - அப்பொழுது, அருகந்தக் கையரை - அருகராகிய கீழ்மக்களை, குந்தவேல் கண் குல மடமாதரும் - கூரிய வேற்படைபோன்ற கண்களையுடைய அவர் மனைவியரும், மைந்தராகிய மக்களும் - புதல்வராகிய மக்களும், கண் அழல் சிந்த நோக்கி - கண்களில் நெருப்புப் பொறி சிதற நோக்கி, இகழ்ந்து இவை செப்புவார் - நிந்தித்து இவற்றைக் கூறுவாராயினர்.

     அருகந்தர் - அருகர். திண்மையுடையராகிய புதல்வர்களும் என்றுமாம். (11)