சமணரைக் கழுவேற்றிய படலம்431



எழுந்தனர் - அவ்வஞ்சகர்கள் எழுந்தார்கள்; பூவைமார் போதும் என்னத்
தடுத்தனர் - அவர் மனைவியர் (நீவிர் பெற்ற வெற்றி) போதுமென்று
தடைப்படுத்தினர்.

செல்வன் மின்க ணுமக்கிது செவ்வியன்
றல்லல் கூர வருந்துன்பத் தாழநாம்
எல்லி கண்ட கனவுண் டிதனையாஞ்
சொல்லு கேமின்று கேண்மெனச் சொல்லுவார்.

      (இ - ள்.) செல்லன்மின்கள் - போதலொழியுங்கள்; நுமக்கு இது
செவ்வி அன்று - நுமக்கு இது வெற்றி தருங் காலமன்று; நாம் அல்லல் கூர
அருந் துன்பத்து ஆழ - நாங்கள் கவலைமிகக் கடத்தற்கரிய துன்பக் கடலுள்
அழுந்த, எல்லி கண்ட கனவு உண்டு - இரவிற் கண்ட கனா உண்டு; யாம்
இதனை இன்று சொல்லுகேம் - யாம் இக்கனவினை இப்பொழுது
சொல்லுவேம்; கேண்ம் எனச் சொல்லுவார் - கேளுங்களென்று
கூறுவாராயினர்.

     செல்லன்மின்கள், விகுதிமேல் விகுதி வந்தது. செவ்வி - தருணம்.
கேண்ம், கேளும் என்னும் வினைமுற்றின் ஈற்றயலுகரம் கெட்டது. (15)

          [கலி நிலைத்துறை]
இடைய றாதுநம் பாழியும் பள்ளியு மெங்குஞ்
சடையர் முஞ்சியர் சாம்பலர் தாங்கிய சூலப்
படையர் தீவிழிப் புலவுவாய்ப் பாய்பெரும் புலித்தோல்
உடைய ராய்ச்சிலர் வந்துவந் துலாவுதல் கண்டேம்.

     (இ - ள்.) இடையறாது - இடைவிடாது, நம் பாழியும் பள்ளியும்
எங்கும் - நமது தவச்சாலையும் கோயிலுமாகிய எங்கும், சடையர் முஞ்சியர்
சாம்பலர் - சடையினையுடையராயும் முஞ்சிப் புல்லையுடையராயும் சாம்பற்
பூச்சினை யுடையராயும், தாங்கிய சூலப்படையர் - சூலப் படையினைத்
தாங்கியவராயும், தீவிழி புலவுவாய் பாய் பெரும் புலித்தோல் உடையராய் -
நெருப்புப் போலும் விழிகளையும் புலால் நாறும் வாயினையுமுடைய
பாய்கின்ற பெரிய புலியின் தோலை ஆடையாக வுடைய வருமாகி, சிலர்
வந்து வந்து உலாவுதல் கண்டேம் - சிலர் வந்து வந்து உலாவுதலைப்
பார்த்தேம்.

     பள்ளி - அருகன் கோயில், பாழி - சமண் முனிவர் இருப்பிடம்.
தவச்சரலை பள்ளியெனப் படுதலுமுண்டு. முஞ்சி - ஒருவகைப் புல்; அதனால்
அரைஞாண் தரித்துக் கொள்வர். தோளிலே சூலப்படையின்
குறியினையுடையரும் என்றுமாம் சடை முதலிய வெல்லாம் சைவதாபதக்
கோலமாதல் காண்க. (16)

கன்னி யிற்றுற வன்னங்கள் கணவனிற் றுறவின்
மன்னு மாரியாங் கனைகணூல் வாங்குமக் குசைகள்
என்ன மூவகைப் பெண்டவப் பள்ளிக ளெல்லாஞ்
சின்ன வெண்பிறைக் கோட்டுமா சிதைக்கவுங் கண்டேம்.