434திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



வித்தைகளும், இவ்வெல்லை வந்து ஒன்றும் உதவில - இது போது வந்து
சிறிதும் உதவில; கள்ளரால் பறிபட்டவோ - அவை திருடராற்
பறிக்கப்பட்டனவோ, கனவில் வெந்தனவோ - நெருப்பில் வெந்துபட்டனவோ,
வெள்ளம் கொண்டவோ - வெள்ளத்தாற் கொள்ளப்பட்டனவோ, சேமத்தில்
கிடப்பவோ விளம்பீர் - காவலில் வைக்கப்பட்டுக் கிடக்கின்றனவோ
கூறுமின்.

     மோகாதி விஞ்சை - மோகனம், ஆகருடணம், வசியம், அதிரிச்சியம்,
அஞ்சனம், தம்பனம், வாதம் என்பன. உதவில என்றதும் கனவு நிலையாகக்
கொள்க. (21)

தாவு தீவளர்த் தெழுகரி தன்னையா டரவை
ஆவை யேவிமுன் னம்மனோர் பட்டது மறிந்தீர்
காவ லன்பிணி தணித்திலீ ரினிச்செயுங் கருமம்
யாவ தாகுமோ வதனையு மெண்ணுமி னென்றார்.

     (இ - ள்.) தாவு தீ வளர்த்து - தாவுகின்ற நெருப்பினை வளர்த்து,
எழுகரிதன்னை ஆடு அரவை - அதில் எழுந்த யானையையும் கொல்லுந்
தொழிலையுடைய அரவினையும், ஆவை - பசுவையும், முன் நம்மனோர்
ஏவி பட்டதும் அறிந்தீர் - முன்னொரு காலத்தில் விடுத்து நம்மவர்
பட்டதையும் அறிந்தீர்; காவலன் பிணிதணித் திலீர் - பாண்டியன் வெப்பு
நோயையுந் தணித்திலீர்; இனிச் செயுங் கருமம் யாவது ஆகுமோ - இனிச்
செய்யப் போகும் வினை யாதாய் முடியுமோ, அதனையும் எண்ணுமின்
என்றார் - அதனையுஞ் சிறிது எண்ணிப்பாருங்கள் என்றனர்.

     அடு என்னும் முதனிலை நீண்டு ஆடு என்றாயது. கரி, அரவு, ஆ
இவற்றை ஏவினமையை இப்புராணத்து யானை யெய்த படலம்; நாகமெய்த
படலம், மாயப் பசுவை வதைத்த படலம் என்பவற்றில் முறையே காண்க.
பட்டது - எய்தியது; அழிந்தது என்றுமாம். முற்காலத்தில் நம்மடிகண்மார்
பல மாயங்கள் செய்து தோல்வியுற்றமையும் அறிவீர், நீவிரும் இப்பொழுது
காவலன் பிணி தணித்திலீர் இனி நீங்கள் செய்யுங் காரியம் உங்கட்கு வெற்றி
தருவது எங்ஙனம் இதனைச் சிந்தித்துப் பாருங்கள் என்றார். (22)

இற்றை வைகலுக் கேகன்மி னென்றன ரற
செற்ற வஞ்சகர் செல்லுவார் திரும்பவுங் கையைப்
பற்றி யீர்த்தனர் பெண்டிர்சொற் கேட்பது பழுதென்
றுற்ற தீவினை வழிச்செல்வா ரொளித்தனர் செல்வார்.

     (இ - ள்.) இற்றைவைகலுக்கு ஏகல்மின் - இந்த நாளில் செல்லன்மின்,
என்றனர் - என்று கூறினர்; அறத்தைச் செற்ற வஞ்சகர் - அறத்தைக்
கொன்ற வஞ்சகராகிய அச்சமணர்; திரும்பவும் செல்லுவார் - மீளவுஞ்
செல்லுவாராயினர், கையைப்பற்றி ஈர்த்தனர் - அவர் கையைப் பிடித்து
அம்மகளிர் இழுக்கவும், பெண்டிர் சொல் கேட்பது பழுதென்று - மகளிர்
சொல்லைக் கேட்பது பழுதாகுமென்று கருதி, உற்ற தீவினை வழிச் செல்வார்
- வந்தடைந்த தீவினையின் வழியே செல்லுமவர், ஒளித்தனர் செல்வார் -
மறைந்து செல்வாராயினர்.