சமணரைக் கழுவேற்றிய படலம்435



     வைகலுக்கு, வேற்றுமை மயக்கம். ஒரு காரியத்தின் பொருட்டுச்
செல்வாரைச் செல்லன்மின் என்று கூறுதலும் கையைப்பற்றி ஈர்த்தலும் தீ
நிமித்தமாதலுங் காண்க. ஈர்த்தனர் என்பதை ஈர்க்கவும் என எச்சப்படுத்துக.
ஒளித்தனர், முற்றெச்சம். (23)

கொங்க லர்க்குழல் சரிந்திடக் குரத்தியர் பின்னும்
எங்கள் சொற்கொளா தேகுவீர் பரிபவ மெய்தி
உங்க ளுக்கிடை யூறுவந் துறுகெனச் சபித்தார்
அங்க தற்குமஞ் சார்செல்வா ரழியுநா ளடுத்தார்.

     (இ - ள்.) குரத்தியர் கொங்கு அலர்க்குழல் சரிந்திடப் பின்னும் -
மனைவி மார் மணம் பொருந்திய மலரையணிந்த கூந்தல் சரிய மீண்டும்,
எங்கள் சொல் கொளாது ஏகுவீர் - எங்கள் சொல்லை ஏற்றுக்கொள்ளாது
செல்கின்றீர்; பரிபவம் எய்தி உங்களுக்கு இடையூறு வந்து உறுக எனச்
சபித்தார் - பரிபவம் உண்டாக உங்களுக்குத் துன்பம் வந்துறக் கடவதென்று
சபித்தனர்; அழியும் நாள் அடுத்தார் அழியுங் காலம் வந்து பொருந்தப்பெற்ற
அச்சமணர்கள், அங்குஅதற்கும் அஞ்சார் - அங்கு அதற்கும் பயப்படாமல்,
செல்வார் - போவாராயினர்.

     குரத்தியர் - குரவன்மார் மனைவியர். குரத்தியர் குரவன்மாரைச்
சபித்தனரென்க. பின்னும் என்றது முன்பு ஏகன்மின் என்று கூறிக்
கையைப்பற்றி ஈர்த்தமையைத் தழுவி நின்றது. பரிபவம் - இழிவு, துன்பம்.
உறுகென, அகரந் தொகுத்தல். அழியுநா ளடுத்தாராகலின் செல்வார் என்க. (24)

புட்க ளும்பல விரிச்சியும் போகலென் றெதிரே
தட்க வுங்கடந் தேகுவார் தடங்கய லுகைப்பக்
கட்க விழ்ந்தலர் கிடங்கர்சூழ் கடிநகர்ப் புறம்போய்
உட்கு நெஞ்சரா யாவரு மோரிடத் தீண்டி.

     (இ - ள்.) புட்களும் பலவிரிச்சியும் போகல் என்று எதிரே தட்கவும் -
பறவைகளும் பல தீச்சகுனங்களும் போகன்மின் என்று தடுக்கவும், கடந்து
ஏகுவார் கடந்து செல்லுகின்றவர், தடம் கயல் உகைப்ப கள் கவிழ்ந்து அலர்
கிடங்கர் சூழ் பெரிய கயல் மீன்கள் எழுந்து பாய்தலால் தேனைச் சிந்தித்
தாமரைகள் மலரும் அகழி சூழ்ந்த, கடிநகர்ப்புறம் போய் - காவலையுடைய
நகரின் புறத்தே போய், உட்கும் நெஞ்சராய் - அஞ்சிய நெஞ்சினை
யுடையராய், யாவரும் ஓரிடத்து ஈண்டி - அவரனைவரும் ஓரிடத்திற் கூடி.

     புட்களும் மற்றும் பலவும் விரிச்சியும் என்றுரைத்தலுமாம். செம்போத்து,
காகம் முதலிய பறவைகளும், பூனை, பாம்பு முதலியனவும் இடமாதல்,
வலமாதல், குறுக்கிடுதல் முதலியன பின் வரும் நன்மை தீமைகளை
அறிவிக்கும் நிமித்தங்களாகும். விரிச்சி - வாய்ப்புள் என்றுங் கொள்க;
அஃது இயல்பாகப் பிறர் வாயிற் பிறக்குஞ் சொல் தமது காரியத்தின்
நன்மையையோ தீமையையோ அறிவிப்பதாதல். தட்க என்றமையால் ஈண்டு
இவையெல்லாம் தீயனவாதல் கொள்க. போகன்மின் என்பது விகுதி கெட்டு
வந்தது. கிடங்கு, கிடங்கர் என்றாயது போலி. (25)