436திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



யாது சூழ்ச்சியென் றெண்ணுவா ரிறைவனைக் கண்டீ
தோதி நாமவ னனுமதி யுறுதிகொண் டனைய
ஏதி லாளனை வாதினால் வேறுமென் றிசைந்து
போது வார்நகர் புகுந்துவேத் தவைக்களம் புகுவார்.

     (இ - ள்.) சூழ்ச்சி யாது என்று எண்ணுவார் - வெல்லுஞ் சூழ்ச்சி
யாது என்று எண்ணுவாராகி, நாம் இறைவனைக் கண்டு ஈது ஓதி - நாம்
அரசனைக் கண்டு அவனுக்கு இதனைச் சொல்லி, அவன் அனுமதி உறுதி
கொண்டு - அவனது உடம் பாட்டின் உறுதியைப் பெற்று, அனைய
ஏதிலாளனை வாதினால் வேறும் என்று - அந்த அயலானை வாதத்தினால்
வெல்லுவோ மென்று, இசைந்து போதுவார் - தம்முளொருப்பட்டுப் போகும்
அச்சமணர், நகர் புகுந்து வேத்து அவைக்களம் புகுவார் - நகரிற் புகுந்து
மன்னன் அவைக்களஞ் செல்வார்.

     வேறும் - வெல்வோம். வேத்து, வலிக்கும் வழி வலித்தல். (26)

ஆய போதிளங் காலையிற் கவுணிய ரால
வாயர் சேவடி பணிந்துதம் மடத்தினிற் செல்லக்
காயு மாதவச் செல்வனைக் கங்குல்சூழ்ந் தாங்கு
மாய வஞ்சகர் வந்திடை வழித்தலை மறித்தார்.

     (இ - ள்.) ஆயபோது - அப்பொழுது, இளங்காலையில் - மிக்க
காலைப் பொழுதில், கவுணியர் ஆலவாயர் சேவடி பணிந்து தம் மடத்தினில்
செல்ல - ஆளுடைய பிள்ளையார் திருவாலவாயுடையவரின் சிவந்த
திருவடியினைப் பணிந்து தமது மடத்திற்குச் செல்லா நிற்க, காயும் ஆதவச்
செல்வனை - சுடுகின்ற சூரிய தேவனை, கங்குல் சூழ்ந்தாங்கு - இருள்
சூழ்ந்தாற்போல, மாயவஞ்சகர் வந்து இடை வழித்தலை மறித்தார் - மாய
வஞ்சகராகிய அச்சமணர் வந்து வழி நடுவின் மறித்தனர்.

     சூழ்ந்தாங்கு, விகாரம். மாய வஞ்சகம் - மிக்க வஞ்சகம்; ஒரு
பொருளிருசொல். வழித்தலை, தலை ஏழனுருபு. ஆதவச் செல்வனைக்
கங்குல் சூழ்ந்தாங்கு என்றது இல்பொருளுவமை. (27)

மறித்த கையர்பின் செல்லமுன் மன்னவை குறுகிக்
குறித்த வாளரித் தவிசின்மேற் கொச்சையர் பெருமான்
எறித்த சேயிளம் பரிதியி னேறிவீற் றிருந்தார்
பறித்த சீத்தலைப் புலையர்கள் பொறாதிவை பகர்வார்.

     (இ - ள்.) மறித்த கையர் பின் செல்ல - அங்ஙனம் வழிமறித்த அக்
கீழ் மக்கள் பின்னே செல்ல, கொச்சையர் பெருமான் - காழியர்
பெருமானாகிய பிள்ளையார், முன் மன் அவை குறுகி - முன்னே மன்னன்
அவையினை அடைந்து, குறித்த ஆளரித் தவிசின்மேல் - அவனாற்