சமணரைக் கழுவேற்றிய படலம்437



காட்டப்பட்ட சிங்காதனத்தின்மேல், எறித்த சேய் இளம்பரிதியின் ஏறி
வீற்றிருந்தார் - ஒளி வீசும் சிவந்த இளஞ் சூரியனைப் போல ஏறி
வீற்றிருந்தருளினார்; பறித்த சீத்தலைப் புலையர்கள் - பிடுங்குதலாற் சீப்பட்ட
தலையினை யுடைய புலையர்கள், பொறாது இவை பகர்வார் - பொறுக்காமல்
இவற்றைக் கூறுவாராயினர்.

     கொச்சை - சீகாழியின் பன்னிரு பெயர்களில் ஒன்று. சீழ்த்தலை
எனற்பாலது சீத்தலை என்றாயது. புலையர் - புன்மை யுடையோர். (28)

மழலை யின்னமுந் தெளிகிலா மைந்த*கண் மணியொன்
றுழல்க ருங்கொடி யிருந்திடக் கனியுதிர்ந் தாங்குன்
சுழல்கொள் விஞ்சையி னன்மையான் மன்னனைத் தொடுத்த
தழல வித்தன மென்றுநீ தருக்குறத் தகுமோ.

     (இ - ள்.) மழலை இன்னமும் தெளிகிலா மைந்த - இன்னும் மழலை
தேறாத சிறுவனே, கண்மணி ஒன்று உழல் கருங் கொடி இருந்திட - இரண்டு
கண்களுக்கு ஒரு மணி இருந்து சுழலும் கரிய காக்கை ஏறி யிருக்க, கனி
உதிர்ந்தாங்கு - பனம் பழம் விழுந்தாற்போல, உன் சுழல் கொள் விஞ்சையின்
நன்மையால் - உனது நிலையில்லாத வித்தையின் நன்மையினால், மன்னனைத்
தொடுத்த தழல் அவித்தனம் என்று - அரசனைத் தொடுத்த வெப்பு நோயை
நீக்கினேம் என்று கருதி, நீ தருக்குறத்தகுமோ - நீ தருக்கினையடையத்
தகுமோ.

     கல்வியில்லாத சிறுவன் என இழித்துரைக்குங் கருத்தால் 'மழலை
யின்னமுந் தெளிகிலா மைந்த' என்றனர். மணி - கருவிழி. கொடி - காக்கை.
கருமை என்னும் அடை தன்னோ டியைபின்மை மாத்திரை நீக்கியது.
காகத்தின் இரண்டு கண்ணிற்கும் கருவிழி ஒன்றென்பது,

"காகத் திருகண்ணிற் கொன்றே மணிகலந் தாங்கிருவர்
ஆகத்து ளோருயிர் கண்டம்"

எனத் திருச்சிற்றம்பலக் கோவையாரிலும கூறப்பட்டுள்ளது. உழல்
என்னுஞ் சினை வினை முதல்மேல் நின்றது. தானே உதிருஞ்
செவ்வியிலிருந்த பனம் பழம் காக்கை யேறிய பொழுது இயல்பாக உதிர்ந்த
தேனும் 'காக்கை யேறப் பனம் பழம் உதிர்ந்தது' என்று கூறுவர்; இது
வடமொழியில் காகதாலிய நியாயம் எனப்படும். காக்கையேறக்
கனியுதிர்ந்தாற்போல நீ தீர்க்கத் தொடங்கிய பொழுது இயல்பாக நீங்கிய
அரசனது வெப்பு நோயை நின் விஞ்சை வலியால் நீக்கியதாகக் கருதித்
தருக்குதல் தகுமோ என்றாரென்க - சுழல் கொள்விஞ்சை - மயக்க
வித்தையுமாம். (29)

நந்து நாகுநீர் வண்டுசென் னடைவழி யெழுத்தாய்
வந்து வீழினும் வீழுமவ் வழக்கினின் கையிற்
சிந்து சாம்பருஞ் சிறுசொலு மருந்துமந் திரம்போற்
சந்து சூழ்மலை யான்சுரந் தணித்தன கண்டாய்.

     (பா - ம்.) *தேர்கிலா மைந்த.