44திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



ஏற்றுக்கொண்டு, களிறுதாங்கும் மாமணிக்கோயில் தன்னை - யானைகள்
சுமக்கும் பெரிய மணிகள் அழுத்திய திருக்கோயிலை, வளைந்து - வலம்
வந்து, தம் கழகம் புக்கார் - தமது அவையிற் புகுந்தனர்.

     தருவது : தொழிற்பெயர். (26)

நாறுபூந் தாம நாற்றி நறும்பனி தோய்ந்த சாந்தச்
சேறுவெண் மலர்வெண் டூசு* செழும்புகை தீப மாதி
வேறுபல் வகையாற் பூசை வினைமுடித் திறைஞ்சிக் கீரன்
ஏறினான் கபில னோடு பரணனு மேறி னானே.

     (இ - ள்.) நாறுபூந்தாமம் நாற்றி - மணமுள்ள பூமாலைகளைத்
தொங்கவிட்டு, நறும்பனி தோய்ந்த சாந்தச்சேறு - நறிய பனிநீர் அளாவிய
சந்தனக்குழம்பும், வெண்மலர் வெண்தூசு செழும்புகை தீபம் ஆதி -
வெண்மலரும் வெள்ளாடையும் செழிய தூபமும் தீபமும் முதலிய, வேறு
பல்வகையால் பூசை வினைமுடித்து - வேறு பலவகையாலும் பூசைவினை
முடித்து இறைஞ்சி - வணங்கி, கீரன் ஏறினான் - நக்கீரன் முன்னர்
ஏறினான்! கபிலனோடு பரணனும் ஏறினான் - கபிலனோடு பரணனும்
ஏறினான்.

     இறைவனால் அருளப்பட்ட தெய்வமாப் பலகை ஆதலின் பூசித்து
வணங்கி யேறினர் என்க. முதன்மைபற்றி இம் மூவரையும் விதந்து கூறினார்.
ஓடு : உடனிகழ்ச்சி. (27)

இருங்கலை வல்லோ ரெல்லா மிம்முறை யேறி யேறி
ஒருங்கினி திருந்தார் யார்க்கு மொத்திடங் கொடுத்து நாதன்
தருஞ்சிறு பலகை யொன்றே தன்னுரை செய்வோர்க் கெல்லாஞ்
சுருங்கிநின் றகலங் காட்டித் தோன்றுநூல் போன்ற தன்றே.

     (இ - ள்.) இருங்கலை வல்லோர் எல்லாம் - பெரியநூல்
வல்லோரனைவரும் இம்முறை ஏறி ஏறி ஒருங்கு இனிது இருந்தார் -
இங்ஙனமே ஏறியேறி ஒருசேர வீற்றிருந்தனர்; நாதன் தரும் சிறுபலகை
ஒன்றே - இறைவன் தந்தருளிய சிறிய பலகையொன்றே, யார்க்கும் ஒத்து
இடம் கொடுத்து - அனைவர்க்கும் ஒக்க இடங் கொடுத்து, தன் உரை
செய்வோர்க்கு எல்லாம் - தன் உரை காண்பாரனைவருக்கும், சுருங்கி
நின்று அகலம் காட்டித் தோன்றும் நூல்போன்றது - எழுத்தாற் சுருங்கி
நின்று பொருள் விரிவு காட்டித் தோன்றும் நூலை ஒத்தது.

     ஒத்து - ஒக்க. கொடுத்து அதனால் நூல்போன்றது என்க. அகலம் -
விரிவுரை. அன்று, ஏ : அசைகள். (28)


     (பா - ம்.) * வண்மலர் வண்டூசு