சமணரைக் கழுவேற்றிய படலம்441



ஆறினோ டிரண்டடுத்த வாயிரஞ் சமணரும்
வேறுவேறு தாமுயன்ற மந்திரங்கள் வேறுவே
றூறுநீர் சுரந்தவோலை யிற்பொறித் தொருங்குபோய்ச்
சீறிவா னிமிர்ந்தெழுந்த தீயின்வாய் நிரப்பினார்.

     (இ - ள்.) ஆறினோடு இரண்டு அடுத்த ஆயிரம் சமணரும் - ஆறு
என்னும் எண்ணுடன் இரண்டு சேர்ந்த ஆயிரம் (எண்ணாயிரம்) சமணரும்,
வேறு வேறு தாம் முயன்ற மந்திரங்கள் - தாம் முயன்று கற்ற வேறு வேறு
மந்திரங்களை, ஊறு நீர் சுரந்த வேறு வேறு ஓலையில் பொறித்து -
ஊறுகின்ற நீர் சுரந்த வெவ்வேறாகிய ஓலையில் எழுதி, ஒருங்கு போய் ஒரு
சேரச் சென்று, சீறிவான் நிமிர்ந்து எழுந்த தீயின் வாய் நிரப்பினார் - சினந்து
வானின் கண் ஓங்கி யெழுந்த அனலின்கண் நிரப்பினார்கள்.

     முயன்ற - முயன்று பயின்ற. நீர் சுரந்த வோலை - சிறிதும் நீர் வற்றாத
பச்சோலை. வேறு வேறு ஓலையில் என்க. எண்ணிறந்த மந்திரங்களை
எண்ணிறந்த ஓலையிற் பொறித்து எண்ணிறந்தோர் ஒருங்கு சென்று தீயிற்
போகட்டனர் என்றார். (37)

அக்கிவாய் மடுத்தவே டனைத்துமக் கணத்தினே
இக்குவா யுலர்ந்ததோ டெனக்கரிந்து சாம்பராய்
உக்கவாறு கண்டுநீச ருட்கிடந்து பொங்கவே
திக்குளார்கள் கண்டபேர் சிரித்துளார்க ளாயினார்.

     (இ - ள்.) அக்கிவாய் மடுத்த ஏடு அனைத்தும் - அவ்வனல் வாய்
மடுத்த ஏடு முற்றும், அக்கணத்தினே - அந்தக் கணப்பொழுதிலேயே,
இக்குவாய் உலர்ந்த தோடெனக் கரிந்து சாம்பராய் - கரும்பிலுள்ள காய்ந்த
தோட்டைப்போலக் கரிந்து சாம்பராகி, உக்கவாறு கண்டு - அழிந்த
தன்மையைக் கண்டு, நீசர் உள் கிடந்து பொங்க - புலையர்களாகிய
அச்சணமரது உள்ளம் புழுங்கிப் பொங்க, திக்குளார்கள் கண்டபேர் -
அதனைக் கண்டவர்களாகிய அத்திசையிலுள்ளாரனைவரும், சிரித்துளார்கள்
ஆயினார் - சிரிப்பார்களாயினர்.

     அங்கி எனற்பாலது அக்கி என வலித்தது; அக்கினி என்பதன் கடைக்
குறையுமாம். கரும்பின் உலர்ந்ததோடு நெருப்பிலிட்டாற் கரிதல் போன்று
என்க. கண்டபேர் - கண்டவர்; வழக்குப் பற்றி வந்தது; சிரித்துளார்கள் -
சிரித்தவர்கள், சிரிப்பவர்கள். (38)

விரிந்தவேத நாவர்தாம் விரித்தவேத மெய்ப்பொருள்
வரைந்தபுத்த கத்தைவண் கயிற்றினால் வகிர்ந்துதாம்
அருந்தஞான வமுதளித்த வம்மைபே ரகப்படத்
தெரிந்தவே டெடுத்தடுத்த தீயின்வாயி லிட்டனர்.