சமணரைக் கழுவேற்றிய படலம்443



     நூல் வரைந்த - திருமுறையினின்றும் கொண்ட; பதிகம் எழுதிய
என்றுமாம். (40)

வெந்தசிந்தை யமணர்வாது வெல்வதற்கு வேறிடம்
புந்திசெய்து வந்தவப் பொதுத்தலம் பொதுக்கடிந்
தந்தணாளர் வாதுவென்ற வன்றுதொட்டு ஞானசம்
பந்தனென்ற நாமமே படைத்துயர்ந்த தின்றுமே.

     (இ - ள்.) வெந்த சிந்தை அமணர் வாது வெல்வதற்கு - புழுங்கிய
உள்ளத்தை யுடைய சமணர் வாதில் வெல்வதற்கு, வேறு இடம் புந்தி செய்து
வந்த அப்பொதுத்தலம் - வேறு இடம் வேண்டுமெனக் கருதி வரப் பெற்ற
அப்பொது விடமானது, அந்தணாளர் வாது வென்ற அன்று தொட்டு -
ஆளுடைய பிள்ளையார் வாதில் வென்ற அன்று முதல், இன்றும் -
இற்றைக்கும், பொதுக்கடிந்து - பொதுமை நீங்கி, ஞான சம்பந்தன் என்ற
நாமமே படைத்து உயர்ந்தது - ஞான சம்பந்தன் என்ற பெயரையே
படைத்துச் சிறந்தது.

     கடிந்து - நீக்கி; நீங்கி என்னும் பொருட்டாயது. ஞானசம்பந்தர்
வென்றதற்கு அடையாளமாக அவர் திருப் பெயரிட்டு அவ்விடத்தை
வழங்கலாயின ரென்க. அது 'சம்பந்த நத்தம்' என வழங்கி இக்காலத்தில்
'சாம்ப நத்தம்' என வழங்குகின்றது. (41)

அன்னவேடு முறையினோ டிறுக்கியந்த ணாளர்கோன்
மன்னைநோக்க வினையினோடு பாயுடுத்த மாசர்தாஞ்
சொன்னசூள் புலப்படத் துணிந்தும்வாய்மை நாணொரீஇக்
கன்னிநாட னவைசிரிக்க வாற்றலாது கத்துவார்*.

     (இ - ள்.) அன்ன ஏடு முறையினோடு இறுக்கி - அந்த ஏட்டினைத்
திருமுறையுடன் சேர்த்து இறுக்கிக் கட்டி, அந்தணாளர்கோன் மன்னை
நோக்க - மறையவர் பெருமானாகிய பிள்ளையார் மன்னனைப் பார்க்க,
வினையினோடு பாய் உடுத்த மாசர் - தீவினையுடன் பாயையும் உடுத்த
அழுக்கினையுடைய அச்சமணர், தாம் சொன்ன சூள் புலப்படத் துணிந்தும் -
தாங்கள் கூறிய வஞ்சினத்தை விளக்க அறிந்து வைத்தும், வாய்மை நாண்
ஒரீஇ - வாய்மையையும் வெட்கத்தையும் விட்டு நீங்கி, கன்னி நாடன் அவை
சிரிக்க - பாண்டி மன்னன் அவையிலுள்ளார் சிரிக்க, ஆற்றலாது கத்துவார் -
பொறுக்கலாற்றாது கத்துவார்.

     பாய் உடையாகச் சூழ்ந்தாற்போல வினையாலும் சூழப் பெற்றவர்
என்பார் 'வினையினோடு பாயுடுத்த' என்றார். வெந்த ஏட்டில் வரைந்த
மந்திரத்தையுடைய சமயம் தோற்றது எனவும், அங்ஙனமல்லாதது வென்றது
எனவும் தாமே கூறிய வஞ்சினம் தமக்கு நன்கு தெரிந்திருந்தும், தமது ஏடு
வெந்தவுடன் தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் மீட்டும் வாதிற்கு எழுதலின்
வாய்மையும் நாணும் இல்லார்


     (பா - ம்.) *கதறுவார்.