சமணரைக் கழுவேற்றிய படலம்447



     (இ - ள்.) முன்பு தீயில் வென்றனம் - முன்பு அனல் வழக்கில்
வென்றுவிட்டோம், நீரில் யாதாய் முடியும் என - இனி நீர் வழக்கில் யாதாக
முடியுமோ வெனக் கருதி, அன்பு பேசி எமை இணக்கி அகல நினைத்தாய்
அல்லது - இன்மொழி கூறி எங்களை உடன்படுத்தி ஓடிப்போக நினைத்தாயே
யல்லாமல், நீ பின்பு வாது செயத் துணியும் பெற்றி உரைத்தாய் அல்லை - நீ
பின்பு வாது புரிதற்கு மணந்துணியுந் தன்மையைக் கூறினாயல்லை; புலால்
என்பு பூணி அடி அடைந்த ஏழாய் - புலாலையுடைய எலும்பினை யணிந்த
சிவனடியினை யடைந்த அறிவில்லாதவனே, போதி என மறுத்தார் - (வாதஞ்
செய்ய) வரக்கடவா யென்று மறுத்துக் கூறினர்.

     அல்லதை, திரிசொல். பூணி - பூண்டவன்; இ வினை முதற் பொருள்
விகுதி. பிள்ளையாரையும் அவரது கடவுளையும் இழித்துரைக்குங் கருத்தால்
(புலால் என்பு பூணி யடியடைந்த வேழாய்' என்றார். போதி - போவாய்
என்றுமாம். (49)

ஊகந் தவழும் பழுமரத்தை யுதைத்துக் கரைமா றிடவொதுக்கிப்
பூகந் தடவி வேர்கீண்டு பொருப்பைப் பறித்துப் புடைபரப்பி
மாகந் துழாவிக் கடுகிவரும் வையைப் புனலை மந்திரத்தால்
வேகந் தணிவித் தேடெழுதி விடுத்தார் முன்போல் வெள்காதார்.

     (இ - ள்.) ஊகம் தவழும் பழுமரத்தை உதைத்து - கருங்குரங்கு
தாவுகின்ற ஆலமரங்களைக் கல்லி, கரைமாறிட ஒதுக்கி - கரைகள் உடைபட
அங் கொதுக்கி, பூகம் தடவி வேர் கீண்டு - பாக்கு மரங்களின் முடியை
யளாவி அவற்றின் வேர்களைக் கல்லி, பொருப்பைப் பறித்துப் புடைபரப்பி
-மலைகளை அகழ்ந்து பக்கங்களிற் பரப்பி, மாகம் துழாவிக் கடுகிவரும்
வையைப் புனலை - வானைத் தடவிக்கொண்டு விரைந்த வரும் வைகை
நீரினை, வேகம் மந்திரத்தால் தணிவித்து - வேகத்தை மந்திரவலியினால்
தணித்து, முன்போல் ஏடு எழுதி வெள்காதார் விடுத்தார் - முன்போலவே
ஏடுகள் எழுதி வெட்கமில்லாதவராய் விட்டனர்.

     வேகம் - கடுகிய செலவு. (50)

சிறையேய் புனல்சூழ் வேணுபுரச் செல்வர் யாருந் தெளிவெய்த
மறையே வாய்மை யுரையாகின் மறைகண்முழுதுந் துணிபொருடான்
பிறையேய் வேணிப் பிரானாகிற் பெருநீ ரெதிரே செல்கவென
முறையே பதிக மெடுத்தெழுதி விட்டார் முழங்கிவரு புனலில்.

     (இ - ள்.) சிறை ஏய் புனல் சூழ் வேணுபுரச் செல்வர் - கரை
பொருந்திய நீர் சூழ்ந்த காழிச், செல்வர், யாரும் தெளிவு எய்த -
அனைவரும் தெளிவடைய, மறையே வாய்மை உரையாகில் - வேதமே
உண்மையுரையானால், மறைகள் முழுதும் துணி பொருள் - அம்மறைகள்
அனைத்தும் துணிந்து கூறும் மெய்ப்பொருள், பிறை ஏய் வேணிப் பிரான்
ஆகில் - பிறைமதியை யணிந்த சடையையுடைய சிவபிரானேயானால்,
பெருநீர் எதிரே செல்க என - இந்த வெள்ள நீரின் எதிரேறிச் செல்லக்
கடவது என்று, முறையே பதிகம் எடுத்து எழுதி - முறையாகப் பதிகம்
எடுத்து எழுதி, முழங்கிவரு புனலில் விட்டார் - ஆரவாரித்து வரும் நீரில்
விட்டனர்.

     யாரும் தெளிவெய்தப் பதிகம் எடுத்தெழுதி விட்டார் என இயைக்க.
எழுதி விட்ட பதிகமாவது,