448திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



"வாழ்க வந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே"

என்னும் பாசுரத்தை முதலாகவுடையது. (51)

தேசம் பரவுங் கவுணியர்கோன் விடுத்த வேடு செழுமதுரை
ஈச னருளாங் கயிறுபிணித் தீர்ப்ப நதியி லெதிரேற
நாசஞ் செய்யும் பொறிவழியே நடக்கு* முள்ள மெனச்சென்று
நீச ரேடெண் ணாயிரமு நீத்த வழியே யொழுகியவால்.

     (இ - ள்.) தேசம் பரவும் கவுணியர் கோன் விடுத்த ஏடு - உலகத்தார்
துதிக்கும் ஆளுடைய பிள்ளையார் விடுத்த ஏடானது, செழுமதுரை ஈசன்
அருளாம் - செழிய மதுரைப் பிரானாகிய சோமசுந்தரக் கடவுளின்
திருவருளாகிய, கயிறு பிணித்து ஈர்ப்ப - கயிறானது கட்டியிழுத்தலால்,
நதியில் எதிரேற - நதியில் எதிரேறிச் செல்லா நிற்க, நீசர் ஏடு
எண்ணாயிரமும் - புலைஞராகிய சமணர்களின் எண்ணாயிர ஏடுகளும்,
நாசம் செய்யும் பொறிவழியே நடக்கும் உள்ளமென - அழிவைத் தரும்
ஐம்புலன்களின் வழியே நடக்கும் உள்ளம்போல, நீத்த வழியே சென்று
ஒழுகிய - வெள்ளஞ் செல்லும் வழியே சென்று நடந்தன.

     பொறியானது உள்ளத்தை ஈர்த்துச் செல்லுதலின் நீத்தத்திற்குப்
பொறியையும், அதன் வழிச் சென்ற சமணர் ஏட்டிற்கு உள்ளத்தையும்
உவமை கூறினார். தீயோராகிய சமணரது ஏட்டிற்குப் பொறிவழிச் செல்லும்
உள்ளத்தை உவமை கூறியது பெரிதும் பொருத்தமுடைத்தாதல் காண்க. (52)

சிங்க மனையா ரெழுதுமுறை யெதிராற் றேறத் தெரிந்தமரர்
அங்க ணறும்பூ மழைபொழிந்தா ரறவோர் துகில்விண்ணெறிந்
                                           தார்த்தார்
கங்கை யணிந்தார் திருத்தொண்டர் கண்ணீர்க் கடலி லமிழ்ந்தினார்
வெங்க ணமணர் நடுங்கியுடல் வெயர்வைக் கடலி லமிழ்ந்தினார்.

     (இ - ள்.) சிங்கம் அனையார் எழுதும் முறை ஆற்று எதிர் ஏற -
பரசமயங்களாகிய யானைகட்குக் கோளரி போல்வராகிய பிள்ளையார் எழுதி
விட்ட திருமுறை ஆற்றின்கண் எதிரேறிச் செல்லாநிற்க, அமரர் தெரிந்து
அங்கண் நறும்பூ மழை பொழிந்தார் - தேவர்க ளதனை யுணர்ந்து
அவ்விடத்தில் நறிய மலர்மழை பொழிந்தனர்; அறவோர் துகில்விண் எறிந்து
ஆர்த்தார் - முனிவர்கள் ஆடையை வானில் வீசி ஆரவாரித்தனர்; கங்கை
அணிந்தார் திருத்தொண்டர் கண்ணீர்க் கடலில் அமிழ்ந்தினார் -
கங்கையையணிந்த சிவபிரான் அடியார்கள் கண்களிலிருந்து வரும் இன்ப
நீர்க்கடலில் அழுந்தினார்கள்; வெம்கண் அமணர் உடல் நடுங்கி
வெயர்வைக்கடலில் அமிழ்ந்தினார் - வன்கண்மையுடைய அமணர்கள் உடல்
நடுங்கி வெயர்வைக்கடலுள் அழுந்தினார்கள்.

     கள் நறும்பூ எனப் பிரித்து மதுவையுடைய நறியபூ என்றுரைத்தலுமாம்.
திருத்தொண்டர்க்கு ஆனந்தத்தாற் கண்ணீரும். அமணர்க்கு அச்சத்தால்
வெயர் நீரும் பெருகின என்க. (53)


     (பா - ம்.) *பொறிவழி போய்