சமணரைக் கழுவேற்றிய படலம்449



வேமே யென்ப தறியாதே வெல்வே மென்றே சூளொட்டி
நாமே யிட்ட வேடெரயல் வேவக் கண்டு நதிக்கெதிரே
போமே யின்னம் வெல்வேமென் றிட்ட வேடும் புணரிபுகத்
தாமே தம்மைச் சுடநாண நின்றா ரமணர் தலைதூக்க.

     (இ - ள்.) வேம் என்பது அறியாது வெல்வே மென்று சூள் ஒட்டி -
வெந்து போகும் என்பதனை அறியாமல் வெல்லுவோம் என்று வஞ்சினங்
கூறி, நாமே இட்ட ஏடு எரியில் வேவக்கண்டும் - நாமே கொண்டு
போய்ப்போட்ட ஏடுகள் அனலில் வேதலைப் பார்த்துவைத்தும், நதிக்கு
எதிரே போம் இன்னம் வெல்வே மென்று - நதியினெதிரே நம்மேடு போகும்
(அதனால்) இன்னமும் வெல்லுவோமென்று, இட்ட ஏடும் புணரிபுக - இட்ட
ஏடும் கடலில் சென்று புக்கனவே என, தாமே தம்மைச் சுட - தம் உள்ளமே
தம்மைச் சுட்டு வருத்துவதால,் அமணர்தலை தூக்கி நாணி நின்றார் -
அமணர்கள் தலையிறக்கி வெட்கி நின்றனர்.

     வேகு மென்பது அறியாமல் ஏட்டினைத் தீயிலிட்ட அறியாமை மேலும்,
அதனைக் கண்ட பின்னரும் நம் ஏடு ஆற்றெதிரே செல்லுமெனக் கருதி
யிட்ட அறியாமையும் உடையமாயினேம் எனக் கருதுதலால் அவர்கள்
உள்ளமே அவர்களைச் சுடலாயின வென்க. புக என்பதற்குப் புக்கனவேயென
என்று விரித்துரைக்க. தூக்குதல் - தொங்கவிடுதல்; கவிழ்த்தல். (54)

பொருப்பே சிலையாய்ப் புரங்கடந்த புனித னேயெத் தேவர்க்கும்
விருப்பேய் போகம் வீடுதரு மேலாங் கடவு ளெனநான்கு
மருப்பேய் களிற்றான் முடிதகர்த்தான் மருமானறியக்
                                     குருமொழிபோல்
நெருப்பே யன்றி வேகவதி நீரும் பின்னர்த் தேற்றியதால்.

     (இ - ள்.) பொருப்பே சிலையாய்ப் புரம் கடந்த புனிதனே -
மேருமலையையே வில்லாகக் கொண்டு திரிபுர மெரித்த தூயோனாகிய
சிவபெருமானே, எத்தேவர்க்கும் - எல்லாத் தேவர்களுக்கும், விருப்பு
ஏய்போகம் வீடுதரும் மேலாம் கடவுள் என - விருப்பம் பொருந்திய
இன்பத்தையும் வீடு பேற்றையும் அளித்தருளும் முதற் கடவுளென்று, நான்கு
மருப்பு ஏய் களிற்றான் முடிதகர்த்தான் மருமான் அறிய - நான்கு
கொம்புகளையுடைய வெள்ளையானையையுடைய இந்திரன் முடியினைத்
தகர்த்தெறிந்த உக்கிரப் பெருவழுதியின் வழித்தோன்றலாகிய சவுந்தரிய
பாண்டியன் அறியமாறு, குருமொழிபோல் - குருவின் உபதேச மொழிபோல,
நெருப்பே அன்றி - முன்னர் அனல் தெளிவித்ததே யல்லாமல், பின்னர்
வேகவதி நீரும் தேற்றியது - பின்னர் வையையின் புனலுந் தெளிவித்தது.

     போகம் - இம்மை, மறுமை யின்பங்கள். எத்தேவர்க்கும்
மேலாங்கடவுள் என இயைத்தலுமாம். உறுதி பெறத்தெளிவித்த தென்பார்
'குருமொழிபோல்' என்றார். (55)

பொய்யின் மறையின் புறத்தமணர் புத்தர்க்கன்றி வாய்மையுரை
செய்யு மறைநூல் பலதெரிந்தும் சிவனே பரமென் றறியாதே
கையில் விளக்கி னொடுங்கிடங்கில் வீழ்வார் போலக்
                                      கலங்கிமனம்
ஐயமடைந்த பேதையர்க்கு மறிவித் தனவே யவையன்றோ.*


     (பா - ம்.) *மனத்தைய மடைந்த அறிவித்தஃதேயது வன்றோ.