குற்றமில்லாத கோமயத்தை
வாரிப் பூசினார்; இதுவும் கிட்டாது ஒழிபவர் -
இதுவுங் கிடைக்காம லொழிபவர், ஆவின் கன்றைத் தோளில் இட்டு
உயிரைப் பெற்றார் - பசுவின் கன்றினைத் தோளிற் றாங்கி உயிரைப்
பெற்றனர். (61)
கூறிட்ட
மூன்றுங் கிட்டா தயர்பவர் குற்றந்தீர
நீறிட்டார் நெற்றி யோடு நிருமல கோம யத்தின்
சேறிட்டார் நெற்றியோடு நெற்றியைச் செறியத் தாக்கி
மாறிட்ட பாசந் தன்னை மறித்திட்டுப் பிறப்பை வெல்வார். |
(இ
- ள்.) கூறிட்ட மூன்றும் கிட்டாது அயர்பவர் - இங்குக் கூறிய
மூன்றுங் கிடைக்காமல் வருந்துபவர், குற்றம்தீர நீறு இட்டார் நெற்றியோடும்
- குற்றம் நீங்கத் திருநீறிட்டவரின் நெற்றியோடும், நிருமல கோமயத்தின்
சேறு இட்டார் நெற்றியோடும் - தூயகோமயக் குழம்பினை யிட்டவரின்
நெற்றியோடும், நெற்றியைச் செறியத் தாக்கி - தமது நெற்றியைப் பொருந்தத்
தாக்கி, மாறு இட்ட பாசம் தன்னை மறித்திட்டு - தம்மோடு மாறுதலைக்
கொண்ட பாசத்தளையைப் போக்கி, பிறப்பை வெல்வார் - பிறப்பினை
யொழப்பார்கள்.
கூறிட்ட
- கூறிய, மாறிட்ட - மாறு கொண்ட, மறித்திட்டு -
மடங்கச்செய்து, வலியை அழித்து என்றபடி, திருநீற்றுச் சார்புற்றமையால்
பாசத்தை நீக்கிப் பிறப்பை யொழிப்பாராயினர் என்க. (62)
மற்றிவர் தம்மை யூற்றஞ் செய்திலர் மடிந்தோர் யாருஞ்
சுற்றிய சேனங் காக நரிகணாய் தொடர்ந்து கேள்விப்
பற்றிநின் றீர்த்துத் தின்னக் கிடந்தனர் பரும யானை
வெற்றிகொள் வேந்தன் காழி வேந்தரைத் தொழுது நோக்கா. |
(இ
- ள்.) இவர் தம்மை ஊற்றம் செய்திலர் - இன்னோரைச்
சிவவேடத்தினர் ஊறு செய்யாது விட்டனர்; மடிந்தோர் யாரும் -
இறந்தவரனைவரும், சுற்றிய சேனம் காகம் நரிகள் நாய் தொடர்ந்து -
சூழ்ந்த பருந்தும் காக்கையும் நரிகளும் நாய்களுந் தொடர்ந்து, கௌவிப்பற்றி
நின்று ஈர்த்துத் தின்னக் கிடந்தனர் - வாயாற் கௌவிப் பிடித்து நின்று
இழுத்துத் தின்னக் கிடந்தனர்; பருமம் யானை வெற்றிகொள் வேந்தன் -
கவச மணிந்த யானையை யுடைய வெற்றி பொருந்திய பாண்டிய மன்னன்,
காழி வேந்தரைத் தொழுது நோக்கா - காழி மன்னராகிய பிள்ளையாரை
வணங்கி நோக்கி.
மற்று,
அசை, ஊற்றம் - ஊறு. (63)
இன்றுநீ ரிட்ட வேடிங் கியாவருங் காண நேரே
சென்றதே யெங்கே யென்றா னதனையாஞ் செம்பொற்கூடன்
மன்றவ ரருளா லின்னே வருவிப்ப மென்று வாது
வென்றவர் நதியின் மாடே மேற்றிசை நோக்கிச் செல்வார். |
(இ
- ள்.) இன்று நீர் இட்ட ஏடு - இப்பொழுது நீர் போட்ட
ஏடானது, யாவரும் காண நேரே சென்றதே எங்கே என்றான் - அனைவரு
மறிய நேரே போயிற்றே அஃது எங்கே என்று வினவினான்; வாது வென்றவர்
- வழக்கில் வெற்றிபெற்ற பிள்ளையார், செம்பொன்கூடல் மன்றவர் அருளால்
- சிவந்த பொன்மயமாகிய கூடலில் வீற்றிருக்கும் வெள்ளியம்பலவர்
திருவருளால், யாம் அதனை இன்னே வருவிப்பமென்று - யாம்
அவ்வேட்டினை இப்பொழுதே வருவிப்போமென்று கூறியருளி, நதியின்
மாடே மேற்றிசை நோக்கிச் செல்வார் - ஆற்றின் கரையிலேயே
மேற்றிசையை நோக்கிச் செல்வாராயினர்.
|