454திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



பாட்டின்மேற் கருணை வைத்தார் சயம்புவாய்ப் பராரைவில்லக்
காட்டினு ளிருப்ப நேரே கண்டுதாழ்ந் தெழுந்து சண்பை
நாட்டினார் வலங்கொண் டேத்தி யெதிர்நின்றார் நகைத்தார் நிம்பத்
தோட்டினா னதுகேட் டங்கே தோன்றினான் றானையோடும்.

     (இ - ள்.) பாட்டின்மேல் கருணை வைத்தார் -திருப்பதிகத்தின்மேல்
அருள் வைத்த இறைவர், சயம்புவாய் பராரைவில்லக் காட்டினுள் இருப்ப -
சுயம்புமூர்த்தியாய்ப் பருத்த அரையையுடைய வில்வக்காட்டினுள்ளே இருக்க,
நேரே கண்டு தாழ்ந்து எழுந்து - நேரிற் கண்டு வீழ்ந்து வணங்கி எழுந்து,
சண்பை நாட்டினார் வலம் கொண்டு ஏத்தி எதிர்நின்றார் -
காழிநாட்டினையுடைய பிள்ளையார் வலம் வந்து துதித்துத் திருமுன்
நின்றனர்; நகைத்தார் நிம்பத் தோட்டினான் - விளங்கும் இதழையுடைய
வேப்ப மலர்மாலையை யணிந்த பாண்டியன், அது கேட்டு தானையோடும்
அங்கே தோன்றினான் - அதனைக் கேட்டுத் தன் சேனையுடன் அங்கு
வந்தனன்.

     பரு அரை பராரை என்றாயது மரூஉ முடிபு. நகைத்தோட்டு
நிம்பத்தாரினான் என மாறுக. (67)

அந்தமா விலிங்கத் தீச னாயிர மதியங் கண்ட
முந்தைவே தியராய்த் தோன்றி முத்தமிழ்க் கரசை நீயென்
மைந்தனா மிளையோ னொப்பாய் வருகென நீறு சாத்திச்
சிந்தைநீ ளார்வங் கூரத் திருவருள் சுரந்து நின்றார்.

     (இ - ள்.) அந்தமா இலிங்கத்து - அந்தச் சிறந்த இலிங்கத்தினின்றும்,
ஈசன் - இறைவன், ஆயிரம் மதியம்கண்ட முந்தை வேதியராய்த் தோன்றி -
ஆயிரம் பிறகளைக் கண்ட முதிய மறையவனாகத் தோன்றி, முத்தமிழ்க்கு
அரசை - மூன்று தமிழுக்கும் அரசராகிய பிள்ளையாரை, நீ என் மைந்தனாம்
இளையோன் ஒப்பாய் - நீ எனது புதல்வனாகிய இளைவனைப் போல்வாய்;
வருக என நீறு சாத்தி - வரக்கடவாயென்று திருநீறு சாத்தி, சிந்தைநீள்
ஆர்வம் கூர - உள்ளத்தின்கண் பேரன்பு மிக, திருவருள் சுரந்து நின்றார் -
திருவருள் பாலித்து நின்றருளினர்.

     வருகென அருகணைத்து நீறுசாத்தி என்க. (68)

நின்றவந் தணரை யன்று நிருமல ஞான மீந்தார்
என்றுகண் டிறைஞ்சி யைய நீரில்யா னிட்ட வேடு
சென்றதிங் கெடுத்தீர் நீரே யஃதுநுஞ் செல்வர்க் கேற்ற
தன்றதைத் தருதி ரென்றா ரறுமுகச் செம்மல ன்னார்.

     (இ - ள்.) அறுமுகச் செம்மல் அன்னார் - ஆறுமுகங்களையுடைய
முருகக்கடவுளைப் போல்வாராகிய பிள்ளையார், நின்ற அந்தணரை - தமக்கு
எதிரே தோனறி நின்ற அந்தணரை, அன்று நிருவல ஞானம் ஈந்தார் என்று
கண்டு - முன் தூய சிவ ஞானத்தினைத் தமக்கு அளித்தருளியவரென்று
உணர்ந்து, இறைஞ்சி - வணங்கி, ஐய - ஐயனே, நீரில் யான் இட்ட ஏடு
இங்கு சென்றது - நீரிலே யான் விட்ட ஏடு இங்கு வந்தது, எடுத்தீர் நீரே -
அதனை யெடுத்தவர் நீரே யாவீர்; அஃது நும் செல்வர்க்கு ஏற்றது அன்று -
அது நுமது புதல்வர் விளையாடுதற்கேற்ற தன்று; 'அதைத் தருதிர்' என்றார் -
(ஆகலின்) அதனைத் தந்தருள்வீராக என்று கேட்டனர்.