சமணரைக் கழுவேற்றிய படலம்455



     'நீ என் மைந்தனாம் இளையோ னொப்பாய்' என முன்பு வேதியர்
கூறினாராகலின் அம்மைந்தன் பொருட்டு அதனை நீர் வைத்திருத்தல்
வேண்டா என்பார் 'அஃது நும் செல்வர்க் கேற்ற தன்று' எனப் பிள்ளையார்
கூறினரென்க. (69)

இன்னமும் பன்னா ளெம்மை யிடந்தொறும் பாடி யெஞ்சும்
புன்னெறி யொழுகு வாரை வென்றுநம் புனித வீடு
பின்னர்நீ பெறுதி யென்னா வேடுதந் தாசி பேசி
மின்னென மறைந்து நின்றார் வேதிய ராய வேடர்.

     (இ - ள்.) வேதியர் ஆய வேடர் - மறையவராகிய திருவேட
முடையார், இன்னமும் பனனாள் எம்மை இடந்தொறும்பாடி - இன்னமும்
பலநாள்வரை எம்மைத் திருப்பதிகடோறுஞ் சென்று பாடி, எஞ்சும் புல் நெறி
ஒழுகுவாரை வென்று - எஞ்சியுள்ள புல்லிய நெறியில் ஒழுகுவாரையும்
வென்று, பின்னர் நம் புனித வீடு பெறுதி என்னா - பின் நமது தூய
வீட்டுலகினையடைவா யென்று, ஏடு தந்து ஆசி பேசி மின் என மறைந்து
நின்றார் - ஏட்டினைக் கொடுத்து ஆக்கமொழி கூறி மின்போல மறைந்து
நின்றனர்.

     ஏடு தந்த என்னா ஆசி பேசி மறைந்து நின்றார் என்க. வேதியராய
ஏடர் எனப் பிரித்து ஏடகர் என்பது ஏடர் என்றாயிற்று எனலும் பொருந்தும்.
(70)

தாதையார் கவர்ந்து மீளத் தந்தவே டதனை வாங்கிப்
போதையார் ஞான முண்டார் புரிசடைப் பிரானார் வௌவி
ஈதையா மிரந்து வேண்டத் தந்தன ரென்று கூறிக்
கோதையார் வேலி னாற்குக் காட்டவக் கொற்கை வேந்தன்.

     (இ - ள்.) தாதையார் கவர்ந்து மீளத் தந்த ஏடு அதனை -
தந்தையார் கைப்பற்றித் திரும்பக் கொடுத்த அவ்வேட்டினை, போதையார்
ஞானம் உண்டார் வாங்கி - ஞானவடிவினராகிய அம்பிகை அளித்த
ஞானவமுதினையுண்ட பிள்ளையார் வாங்கி, ஈதை - இவ்வேட்டினை,
புரிசடைப் பிரானார் வௌவி - முறுக்கிய சடையினையுடைய இறைவர்
கவர்ந்து, யாம் இரந்து வேண்டத் தந்தனர் என்று கூறி - (பின்) யாம்
குறையிரந்து வேண்டக் கொடுத்தருளினாரென்று கூறி, கோதை ஆர்
வேலினாற்குக் காட்ட - மாலையையணிந்த வேற்படையையுடைய
பாண்டியனுக்குக் காண்பிக்க, அக் கொற்கை வேந்தன் - அந்தக் கொற்கை
மன்னனாகிய பாண்டியன்.

     சிவபெருமான் பிள்ளையார்க்குத் தந்தை முறையால் அருள்செய்தலின்
'தாதை யார்' என்றார். போதையார் - போதவுருவினராகிய உமாதேவியார்;

"போதையார் பொற்கிண்ணத் தடிசில் பொல்லாதெனத்
தாதையார் முனிவுறத் தானெனை யாண்டவன்"

எனப் பிள்ளையார் அருளிச்செய்த தேவாரமும் காண்க. கொற்கை, பாண்டியர்
தலைநகரங்களுள் ஒன்றாகலின் 'கொற்கை வேந்தன்' என்றார். (71)

கச்சான வரவ மார்த்த கருணையங் கடலிற் றோன்றும்
விச்சான ஞான முண்டீ ராற்றலின் விளைவு தேறா
தச்சான வலியா னும்மை யளந்தன னடியே னிந்தத்
துச்சான பிழைதீர்த் தாள்கென் றிறைஞ்சினான் றுணர்த்தார்
                                       வேம்பன்.