அன்று
என்பது ஐ பெற்று அற்றை என்றாயது. பாசமும் என்பதிலுள்ள
உம்மை எச்சப் பொருளோடு சிறப்புப் பொருளும் குறித்தது. ஆளுடைய
பிள்ளையார் திருப்பாசுர மெழுதி இட்ட ஏடு ஆற்று நீரிலே எதிர்ந்து
செல்லும் பொழுது அதனைத் தொடர்ந்து எடுக்கவேண்டிக் குலச்சிறையார்
பரிமீதேறிச் சென்றார் என்றும், பிள்ளையார் ஏடு தங்குதற் பொருட்டு
"வன்னியு மத்தமும்" என்னும் பதிகம் பாடாநின்றமையின் காடிடமாக ஆடும்
கண்ணுதல் கோயிலின் பக்கத்தே நீரிலே சென்றுநின்ற ஏட்டினைக்
குலச்சிறையார் சேர்ந்து எடுத்துத் தலைமிசை வைத்துக் கொண்டு வந்து
பிள்ளையாரை வணங்கி ஏட்டினை அனைவர்க்கும் காட்டினர் என்றும்
திருத்தொண்டர் புராணம்
கூறாநிற்கும். (74)
நறைகெழு துழாயி
னானுங் கலுழனு நாகர் வேந்தும்
முறையினா லுகங்கண் மூன்றும் பூசித்து முடியா வின்ப
நிறையருள் பெற்றா ரன்ன நிராமய விலிங்கந் தன்னை
இறுதியா முகத்திற் பாண்டி யிறைமகன் பூசை செய்தான். |
(இ
- ள்.) நறைகெழு துழாயினானும் கலுழனும் நாகர் வேந்தும் -
மணம் பொருந்திய துழாய் மாலையையணிந்த திருமாலும் கருடனும்
பாம்புகளுக்கு வேந்தனாகிய அனந்தனும், முறையினால் உகங்கள் மூன்றும்
பூசித்து - முறையே உகங்கள் மூன்றிலும் வழிபாடு செய்து, முடியா இன்பநிறை
அருள்பெற்றார் - அழியாத இன்பநிறைந்த திருவருளைப் பெற்றனர்; அன்ன
நிராமய இலிங்கம் தன்னை - அந்த நோயற்ற இலிங்க மூர்த்தியை, இறுதியாம்
உகத்தில் - இறுதியாகிய இக்கலியுகத்தில், பாண்டி இறைமகன் பூசை
செய்தான் - பாண்டி மன்னன் வழிபாடாற்றினான்.
உகம்
- யுகம். (75)
அங்கண்மா
நகர்கண் டாங்கோ ராண்டிறை கொண்டு காழிப்
புங்கவ ரோடும் பின்னாட் பூழியர் பெருமான் மீண்டு
மங்கல மதுரை சேர்ந்து வைகுநா ணீற்றுச் செல்வம்
எங்கணும் விளங்கச் சின்னா ளிருந்துபின் ஞானச் செல்வர். |
(இ
- ள்.) அங்கண் மாநகர் கண்டு - அழகிய இடமகன்ற ஓர்
நகரமமைத்து, ஆங்கு காழிப் புங்கவரோடும் ஓராண்டு இறைகொண்டு -
அவ்விடத்தே சீகாழித் தோன்றலாருடன் ஒரு ஆண்டளவு தங்கி, பூழியர்
பெருமான் - சௌந்தரிய பாண்டியன், பின் நாள் மீண்டு மங்கல மதுரை
சேர்ந்து வைகுநாள் - பின்னர் மீள மங்கலம் நிறைந்த மதுரைப் பதியை
யடைந்து தங்கும் நாள், ஞானச் செல்வர் - சிவஞானச் செல்வராகிய
பிள்ளையார், நீற்றுச் செல்வம் எங்கணும் விளங்கச் சின்னாள் இருந்து
திருநீற்றுச் செல்வம் எங்கும் விளங்கச் சிலநா ளங்கிருந்து, பின் - பின்பு.
இறைகொண்டு
- தங்கி. எங்கணும் - பாண்டிநாடு முழுதும். (76)
வடபுலத்
துள்ள வீசன் பதிகளும் வணங்கிப் பாடக்
கடவமென் றெழுந்து கூடற் கண்ணுதற் பெருமான் றன்னை
இடனுறை கயற்க ணாளை யிறைஞ்சிப்பல் வரனும் பெற்று
விடைகொடு தமிழ்நா டெங்கும் பணிந்தனர் மீண்டு போவார். |
|