46திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



தூய பாடல் தொடங்கினர் செய்துகொண்டு - மாண்புடனே தூய
பாடல்களைத் தொடங்கிப் பாடிக்கொண்டு, ஏயவாறு இருந்தார் - தம்மிச்சை
வழியே இருந்தனர்; அந்த எல்லைவாய் - அப்பொழுது.

     பயனைப் பிறரும் பெறுதற்பொருட்டு என்றுமாம். தொடங்கினர் :
முற்றெச்சம். ஏயவாறு என்பதற்கு இறைவர் பணித்தவாறு என்றுரைத்தலுமாம். (30)

பலருஞ் செய்த பனுவலு மாண்பொருண்
மலருஞ் செல்வமும் சொல்லின் வளமையுங்
குலவுஞ் செய்யுட் குறிப்புமொத் தொன்றியே
தலைம யங்கிக் கிடந்தவத் தன்மையால்.

     (இ - ள்.) பலரும் செய்த பனுவலும் - அப்புலவர் பலருஞ் செய்த
பாட்டுக்கள் அனைத்தும், மலரும் மாண்பொருள் செல்வமும் - (உரை
காண்போர் அறிவிற்கேற்றவாறு) விரியும் மாட்சிமையுடைய பொருள்
விழுப்பமும், சொல்லின் வளமையும் - சொல் வளப்பமும், குலவும் செய்யுள்
குறிப்பும் - செய்யுளிலே குறிப்பிற்றோன்றும் பொருளும், ஒத்து ஒன்றி - ஒரு
நிகரவாகப் பொருந்துதலால், தலைமயங்கிக் கிடந்த - (வேறுபாடு அறிய
முடியாது) தலைமயங்கிக் கிடந்தன; அத் தன்மையால் - அதனால்.

     பனுவல் - பாட்டு. குறிப்பு - வியங்கியம். கிடந்த. அன்பெறாத
பலவின்பால் முற்று. (31)

வேறு பாடறி யாது வியந்துநீர்
கூறு பாட லிதுவென்றுங் கோதிலென்
தேறு பாட லிதுவென்றுஞ் செஞ்செவே*
மாறு பாடுகொண் டார்சங்க வாணரே.

     (இ - ள்.) வேறுபாடு அறியாது - வேறுபாடு உணராமல், வியந்து
தம்முள் வியப்புற்று, நீர் கூறு பாடல் இது என்றும் - நீர் கூறிய பாடல்
இதுதான் என்றும், கோது இல் என் தேறுபாடல் இது என்றும் -
குற்றமில்லாத எனது தெளிந்த பாடல் இதுதான் என்றும், சங்க வாணர்
செஞ்செவே மாறுபாடு கொண்டனர் - சங்கப் புலவர்கள் ஒருவருக்கொருவர்
நேரே மாறுபாடு கொண்டனர்.

     செஞ்செவே - செவ்வையாக; நன்றாக. வாணர் : மரூஉ. (32)

மருளு மாறு மயக்கற வான்பொருள்
தெருளு மாறுஞ் செயவல்ல கள்வர்சொற்
பொருளு மாமது ரேசர் புலவர்முன்
அருளு நாவல ராய்வந்து தோன்றினார்.

     (பா - ம்.) * செஞ்சவே.