என்றும் அருளிச் செய்தா
ரென்க. இந்நிலை என்பதற்கு இரட்டுற
மொழிதலால் இப் பொழுதே என்றும் பொருள் கொள்க. (31)
மாசறு மனத்தான் காழி வள்ளலைப் பணிந்து நீரே
தேசிகர் குரவர் நட்டோர் தெய்வமுங் கிளையு மென்னாப்
பேசிய வாறே வேள்வி பெற்றியா னிறீஇத்தான் வேட்ட
பாசிழை யோடு தாழ்ந்து விடைகொடு பரவிப் போனான்.
|
(இ
- ள்.) மாசு அறு மனத்தான் - குற்றமற்ற மனத்தினையுடைய
அவ்வணிகள், காழி வள்ளலைப் பணிந்து - சீகாழி வள்ளலாகிய
பிள்ளையாரை வணங்கி, நீரே தேசிகர் குரவர் நாட்டோர் தெய்வமும்
கிளையும் என்னாப் பேசி - நீரே எமக்கு ஆசிரியருங் குரவரும் நட்பினரும்
கடவுளும் சுற்றத்தாருமாவீ ரென்று கூறி, அவாறே வேள்வி பெற்றியால் நிறீஇ
- அங்ஙனமே திருமணத்தை முறைப்படி முடித்து, தான் வேட்ட பாசிழை
யோடு தாழ்ந்து - தான் மணந்த பசிய அணிகளை யணிந்த அம்மாதுடன்
அவரை வணங்கி, விடைகொடு பரவிப் போனான் - விடை பெற்றுக்கொண்டு
துதித்துச் சென்றான்.
குரவர்
- ஐங்குரவர். தேசிகர், குரவர் என்பவற்றுக்கு ஞானாசிரியரும்,
விஞ்சை யாசிரியரும் என்றுரைத்தலுமாம். என்னா - என்று கூறி, பேசியவாறே
- அவர் உரைத்தவாறே, எனப் பிரித்துப் பொருளுரைத்தலுமாம். வேட்ட -
வேட்கப்பட்ட. பாசிழை, அன்மொழித்தொகை.
வைப்பூரின்கண்
ஏழு புதல்விகளையுடைய தாமன் என்னும் வணிகன்
தனது மருகனுக்கு மூத்த புதல்வியை மணஞ் செய்விப்பதாகக் கூறிப்
பிறனொருவனுக்குப் பொருளாசையால் அளித்து, இங்ஙனமே மருகனை
வஞ்சித்துப் பின் ஐந்து பெண்களையும் பிறர்க்கு அளித்துவிட, அஃதுணர்ந்த
அவனது ஏழாவது புதல்வி மனம் வருந்திப் பெற்றோரறியாமல் அவனுடன்
புறப்பட்டு வழிச்செல்லுங்கால் ஓரிரவில் திருமருகல் என்னும் திருப்பதியில்,
திருக்கோயிலின் பக்கத்துள்ளதொரு மடத்தின்கண் துயிலும்பொழுது,
அவ்வணிகள் அரவு தீண்டி யிறக்க, அது கண்ட அக்கன்னி நெஞ்சம்
பதைபதைத்து வருந்தி ஆற்றாது மருகற்பெருமானை விளித்துப் புலம்பாநிற்க,
அப்பொழுது இறைவனை வழிபடுதற்கு அவண் எழுந்தருளிய
திருஞானசம்பந்தப் பிள்ளையார் அருகு வந்து, நிகழ்ந்ததை அவள் சொல்ல
அறிந்து, அவளது துயரினை யொழிக்கக் கருதித் திருமருகலில் வீற்றிருக்கும்
இறைவன்மீது "சடையாயெனுமால்" என்னும் திருப்பதிகம் பாடி அவ்வணிகளை
உயிர்ப்பித்து அவர்களை ஆண்டே மணம் பொருந்தச் செய்து விடுத்தருளினர்
என்று திருத்தொண்டர் புராணம் கூறாநிற்கும்.
பெரும்பற்றப்
புலியூர் நம்பியானவர் தாமியற்றிய திருவிளையாடற்
புராணத்தில்
"மருத்தயில் பாப்புக் காப்பு வள்ளலை மனத்து வைத்துத்
தருக்கமார் காழி வேந்தர் சடையெனும் யாப் பெடுத்து
விரைத்திரு மருக றன்னில் வெவ்விடந் தீர்த்த தன்றித்
திருப்புறம் பயத்த லத்திற் றீர்த்தனர் திருக்கண் சாத்தி" |
என்னுஞ் செய்யுளால்
திருமருகலில் நிகழ்ந்த வரலாற்றையும் உடன்பட்டு,
திருஞானசம்பந்தப் பெருமான் திருப்புறம்பயத்தில் விடந்தீர்த்து வணிகளை
உயிர்ப்பித்தது அதனின் வேறாய வரலாறு என்று குறிப்பிடுவாராயினர்.
|