வன்னியுங் கிணறு மிலிங்கமு மழைத்த படலம்475



     ஆளுடையபிள்ளையார்க்குச் சில நூற்றாண்டுகளில் முன்னும்
இத்தகைய தொரு சரிதம் நிகழ்ந்துள தென்பது கடைச்சங்க காலத்ததாகிய
சிலப்பதிகாரத்து வஞ்சினமாலையில், காவிரிப்பூம்பட்டினத்தி லிருந்த கற்புடை
மகளிரைக் கண்ணகி யெடுத்துரைக்குமிடத்து

"வன்னி மரமு மடைப்பளியுஞ் சான்றாக
முன்னிறுத்திக் காட்டிய மொய்குழலாள்"

என்று கூறியிருத்தலால் அறியப்படும். சிலப்பதிகாரம் கூறும் நிகழ்ச்சியும்
திருவிளையாடற்புராணங கூறும் நிகழ்ச்சியும், சிறிது வேறுபாட்டுடன்
காணப்படினும் வன்னிமரம் முதலியவற்றைச் சான்றாகக் காட்டினள்
என்பதனை உன்னின் இரண்டும் ஒன்றே போலுமெனக் கருதுதல்
இழுக்காகாது. ஆனால், இரு திருவிளையாடற்புராண ஆசிரியரும் இதற்கு
மாறுபட்ட கருத்தினர் என்பதில் ஐயமில்லை. அவர்கள் கருதுமாறு
திருப்புறம்பயத்தில் விடந்தீர்த்தது ஆளுடைய பிள்ளையாரேயாயின்
சிலப்பதிகாரம் குறிப்பிடும் வரலாறு அதனின் வேறாய தொன்றாகும். (32)

ஏவல்செ யாயத் தாரு மடியரு மீண்ட வீண்டிக்
காவல்செய் மதுரை மூதூர் குறுகித்தன் காதன் மாமன்
பூவையை மணந்த வண்ணங் கேட்டங்குப் புடைசூழ் சுற்றம்
யாவரும் முவப்ப வின்புற் றிருந்தன னிளங்கோ மன்னன்.

     (இ - ள்.) இளங்கோ மன்னன் - வணிகர் தலைவன், ஏவல் செய்
ஆயத்தாரும் அடியரும் - பணிபுரியும் மகளிர் கூட்டமும் ஏவலாளரும்
நெருங்கிவர, ஈண்டிக் காவல் செய் மதுரைமூதூர் குறுகி - (காவலாளர்)
நெருங்கிக் காவல்புரியும் மதுரையாகிய பழம்பதியினை யடைந்து, தன் காதல்
மாமன் பூவையை மணந்த வண்ணம் கேட்டு - தனது அன்புள்ள மாமன்
புதல்வியை மணந்த தன்மையைக் கேட்டு, அங்குப் புடைசூழ் சுற்றம் யாவரும்
உவப்ப - அங்கு வந்து அருகிற் சூழ்ந்த சுற்றத்தா ரனைவரும் மகிழ,
இன்புற்று இருந்தனன் - இன்பமெய்தி இருந்தனன்.

     மன்னர் பின்னோராகிய வணிகர் இளங்கோக்கள் எனப்படுதற்
குரியராகலின் 'இளங்கோ மன்னன்' என்றார். (33)

தன்பெருந் தனமு மாம னீட்டிய தனமு மீட்டி
மன்பெரு நிதிக்கோ னென்ன வாணிகம் பெருக்கி நாய்கன்
இன்புறு காதலார்க ளிருவரு மீன்ற காதல்
நன்பொருண் மகிழ்ச்சி செய்ய நலம்பெற வாழு நாளில்.

     (இ - ள்.) தன்பெருந் தனமும் மாமன் ஈட்டிய தனமும் ஈட்டி - தனது
பெரும் பொருளையும் மாமன் தேடிவைத்த பொருளையும் ஓரிடத்திற்
றொகுத்து, மன் பெரு நிதிக்கோன் என்ன - நிலைபெற்ற பெரிய
குபேரனைப்போல, வாணிகம் பெருக்கி - வாணிகத்தாற் பொருள் பெருக்கி,
நாய்கன் - அவ்வணிகன், இன்புறு காதலார்கள் இருவரும் ஈன்ற - இன்ப
மிக்க காதலையுடைய இரண்டு மனைவியரும் பெற்ற, காதல் நன்பொருள்
மகிழச்சி செய்ய - அன்புள்ள மக்கள் மகிழ்ச்சியை விளைக்க, நலம் பெற
வாழும் நாளில் - நலமாக வாழுங்காலத்தில்.      நிதிக்கோனென்ன ஈட்டி
என்றியைத்தலுமாம். பொருள் - பிள்ளை, "தம்பொரு ளென்ப தம்மக்கள்"
என்னும் குறளும்,