48திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



என்றுரைப்பாருமுளர். முதுவாய பாடல் என்பதற்கு முதிர்ந்த வாயிடத்தவான பாடல் என்றுரைத்தலுமாம். என்ப : அசை. (35)

வாங்கு சங்கப் புலவர் மனங்களித்
தீங்கு நீரெம ரோடு மொருத்தராய்
ஓங்கி வாழ்திரென் றொல்லெனத் தங்களைத்
தாங்கு செம்பொற் றவிசி லிருத்தினார்.

     (இ - ள்.) வாங்கு சங்கப்புலவர் - அவற்றை வாங்கிய சங்கப்
புலவர்கள், மனம் களித்து - மனமகிழ்ந்து, நீர் எமரோடும் ஒருத்தராய் ஈங்கு
ஓங்கி வாழ்திர் என்று - நீர் எம்முடன் ஒருவராய் இங்கே சிறந்து வாழ்வீராக
என்று கூறி, ஒல்லென - விரைந்து, தங்களைத் தாங்கு செம்பொன் தவிசில்
இருத்தினார் - தங்களைத் தாங்குகின்ற சிவந்த பொன்னாலாகிய பலகையில்
இருத்தினார்கள்.

     ஒல்லென, விரைவுக் குறிப்பு, ஒல்லென இருத்தினார் என்க. (36)

பொன்னின் பீடிகை யென்னும்பொன் னாரமேல்
துன்னு நாவலர் சூழ்மணி யாகவே
மன்னி னார்நடு நாயக மாமணி
என்ன வீற்றிருந் தார்மது ரேசரே.

     (இ - ள்.) பொன்னின் பீடிகை என்னும் - பொற்பலகை என்னும்,
பொன் ஆரமேல் - பொன்னாரத்தில், துன்னும் நாவலர் சூழ் மணியாக
மன்னினார் - பொருந்திய நாற்பத்தெண் புலவரும் சுற்றிலும் பதித்த
மணிகளாக இருந்தனர், மதுரேசர் - சோமசுந்தரக்கடவுள், மாநடு நாயகம்
மணி என்ன வீற்றிருந்தார் - பெருமை பொருந்திய நடுநாயகமணி என்னுமாறு
வீற்றிருந்தனர்.

     நாயகமணி - தலைமை மணி. (37)

நதிய ணிந்தவர் தம்மொடு நாற்பத்தொன்
பதின்ம ரென்னப் படும்புல வோரெலாம்
முதிய வான்றமிழ் பின்னு முறைமுறை
மதிவி ளங்கத் தொடுத்தவண் வாழுநாள்.

     (இ - ள்.) நதி அணிந்தவர் தம்மொடும் - கங்கையைத் தரித்த
இறைவரோடும், நாற்பத்தொன்பதின்மர் என்னப்படும் புலவோரெலாம் -
நாற்பத்தொன்ப தின்மரென்று கூறப்படும் புலவர்களனைவரும், பின்னும்
முதியவான் தமிழ் - மீண்டும் தொன்மையுஞ் சிறப்புமுடைய தமிழ்ப்பாக்களை,
முறை முறை மதிவிளங்கத் தொடுத்து - முறை முறையாகக் கற்போர்க்கு
அறிவு விளங்கத் தொடுத்து, அவண் வாழுநாள் - அங்கு வாழும்பொழுது.