480திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



     (இ - ள்.) அல்லல் உற்று அழுங்கி நின்றாள் பரிவு கண்டு -
துன்பமுற்றுவாடி நிற்கும் அவ் வணிகமாதின் வருத்தத்தை நோக்கி, அம்
தண் கூடல் எல்லை இல் கருணை மூர்த்தி அருளினால் - அழகிய குளிர்ந்த
கூடற்பதியில் எழுந்தருளிய அளவிறந்த கருணை வடிவினனாகிய இறைவன்
அருளினால், எவரும் காண - அனைவருங் காணுமாறு, தொல்லையின்
படியே - முன்பிருந்தவாறே, அன்னாள் சொல்லிய கரிகள் மூன்றும் - அம்
மாது சொன்ன சான்றுகள் மூன்றும், கோயில் உத்தர குணபால் எல்லை
ஒல்லை வந்து இறுத்த - திருக்கோயிலின் வட கீழ்த்திசையில் விரைய வந்து
தங்கின.

     கண்டு என்னும் வினையெச்சம் வந்திறுத்த என்னும் வினைகொண்டது;
கண்ட என்னும் பெயரெச்சத்து அகரம் தொக்கது என்றுமாம். தொல்லையின்
படியே - முன்பு திருப்புறம்பயத்தில் இருந்தவாறே. அன்னாள் சொல்லிய -
அவள் மாற்றாளுக்குக் கூறிய. இறுத்த, அன் பெறாத பலவின்பால் முற்று. (45)

அன்னபோ திளையாள் மூத்தாட் கொண்டுபோ யால வாயெம்
முன்னவன் றிருமுன் றாழ்ந்து காட்டுவாண் முகிறோய் சென்னி
வன்னியீ திலிங்க மீது கிணறிதென் மன்றற் சான்றாய்த்
துன்னிய வென்றாள் கண்டாண் முடித்தலை தூக்கி நின்றாள்.

     (இ - ள்.) அன்னபோது - அப்போது, இளையாள் மூத்தாள்
கொண்டுபோய் - இளையவள் மூத்தவளை அழைத்துக்கொண்டு போய்,
ஆலவாய் எம் முன்னவன் திருமுன் தாழ்ந்து - ஆலவாயி லெழுந்தருளிய
எமது முன்னவனாகிய சோமசுந்தரக் கடவுளின் திருமுன் வீழ்ந்து வணங்கி,
காட்டுவாள் - காட்டுவாளாய், என் மன்றல் சான்றாய்த் துன்னிய முகில்
தோய் சென்னி வன்னி ஈது - எனது மணத்திற்குச் சான்றாகிப் பொருந்திய
முகிலை யளாவிய முடியினையுடைய வன்னி மரம் இது; இலிங்கம் ஈது -
இலிங்கம் இது; கிணறு இது என்றாள் - கிணறு இதுவாகு மென்று சுட்டிக்
காட்டிக் கூறினள்; கண்டாள் முடித்தலை தூக்கி நின்றாள் - பார்த்த
மூத்தாள் தனது தலையைக் கீழே யிறக்கி நின்றனள்.

     நான் கூறிய வன்னி இது, இலிங்கம் இது, கிணறு இது; இவை என்
மன்றற் சான்றாய்த் துன்னியன; என்றுரைத்தலுமாம். தூக்கி -
கீழிறக்கிட்டு. (45)

அவ்விடைத் தருவு நீரு மன்றுபோ லின்றுஞ் சான்றாய்
இவ்விடைப் பட்ட வென்ன வதிசய மெவர்க்குந் தேறாத்
தெய்வமு மெளிவந் தங்கைக் கனியினித் திருவி னன்னாள்
கைவசப் பட்ட தென்றாற் கற்பினுக் கரிதே தம்மா.

     (இ - ள்.) அவ்விடை - அவ்விடத்திலுள்ள, தருவும் நீரும் - வன்னி
மரமுங் கிணறும், அன்றுபோல் இன்றும் சான்றாய் - அக்காலத்தைப் போல
இக்காலத்திலும் சான்றாகி, இவ்விடைப் பட்ட - இவ்விடத்து வந்திருந்தன;
என்ன அதிசயம் - இஃதென்ன வியப்பு; எவர்க்கும் தேறாத் தெய்வமும் -
எவராலும் அறியமுடியாத இறைவனும், எளிவந்து அங்கைக் கனியின் -
எளிதாக வந்து உள்ளங்கை நெல்லிக் கனி போல, இத்திருவின் அன்னாள்
கைவசப்பட்டது என்றால் - இத் திருமகள் போன்றாளின் கையி லகப்பட்ட
தென்றால், கற்பினுக்கு அரிது ஏது - கற்பினுக்கு அரிய பொருள் ஏது?
(ஒன்றுமில்லை)