வன்னியுங் கிணறு மிலிங்கமு மழைத்த படலம்481



     நீர் என்னும் தானியின் பெயர் கிணற்றுக்கு ஆயிற்று, ஒரு காலத்து
ஓரிடத்திருந்த நிலையியற் பொருள்களாகிய வன்னி மரமும் கிணறும்
பிறிதொரு காலத்துப் பிறிதோரிடத்தில் அவ்வாறே வந்து தோன்றுதல்
பெரியதோர் புதுமையாகலின் 'என்ன வதிசயம்' என வியந்தார். சான்று
மூன்றனுள் சிறப்பு நோக்கித் தெய்வத்தை வேறுபிரித் தோதினார்.

"காண்டகைய தங்கணவ ரைக்கடவு ளார்போல்
வேண்டலுறு கற்பினர்த மெய்யுரையி னிற்கும்
ஈண்டையுள தெய்வதமு மாமுகிலு மென்றால்
ஆண்டகையி னோர்களு மவர்க்குநிக ரன்றே"

என்னும் கந்தபுராணச் செய்யுள இங்கு நோக்கற் பாலது. அம்ம,
வியப்பிடைச்சொல். இது கவிக் கூற்று. (47)

மங்கைதன் கற்பு மீச னிடத்தவள் வைத்த வன்பும்
அங்கண னவட்குச் செய்த வருளையும் வியந்து நோக்கி
மங்கல நகரா ரெல்லா மகிழ்ச்சியு ளாழ்ந்தார் முல்லைத்
தொங்கலான் முதுமணாட்டி யொருத்தியுந் துன்பத் தாழ்ந்தாள்.

     (இ - ள்.) மங்கல நகரார் எல்லாம் - மங்கலம் நிறைந்த மதுரை
நகரிலுள்ளாரனைவரும், மங்கை தன் கற்பும் - அவ் வணிக மாதின்
கற்பினையும், ஈசன் இடத்து அவள் வைத்த அன்பும் - இறைவன் மாட்டு
அவள் வைத்துள்ள அன்பினையும், அங்கணன் அவட்குச் செய்த
அருளையும் - அவ்விறைவன் அவளுக்குச் செய்த அருளையும், நோக்கி
வியந்து மகிழ்ச்சியுள் ஆழ்ந்தார் - கண்டு வியந்து மகிழ்ச்சிக் கடலுள்
அழுந்தினார்; முல்லைத் தொங்கலான் முதுமணாட்டி ஒருத்தியும் - முல்லை
மாலையை யணிந்த வணிகன் மூத்த மனைவி யொருத்தியும், துன்பத்து
ஆழ்ந்தாள் - துன்பக் கடலுள் அழுந்தினாள்.

     கற்பும், அன்பும் என்புழியும் இரண்டனுருபு விரிக்க. மங்கல நகர் -
சிவநகர் என்றுமாம்; மதுரைக்குச் சிவநகரம் என்னும் பெயருண்மை
தலவிசேடப் படலத்திற் காண்க. (48)

மேதகு வணிகர் மூத்த வினைக்கொடி யாளைப் பொல்லாப்
பாதகி யிவளா மென்று பழித்தனர் படிறு பேசிக்
கோதறு குணத்தி னாளைக் குடிப்பழு துரைத்தாய் நீயென்
காதலி யாகா யென்று கணவனுந் தள்ளி விட்டான்.

     (இ - ள்.) மேதகு வணிகர் - அங்குள்ள சிறந்த வணிகர்கள், மூத்த
வினைக்கொடியாளை - மூத்தாளாகிய தீவினையையுடைய கொடியவளை,
இவள் பொல்லாப் பாதகியாம் என்று - இவள் பொல்லாத பாவியாவாள்
என்று, பழித்தனர் - இகழ்ந்தார்கள்; கோது அறு குணத்தினாளை - குற்றமற்ற
குணத்தினையுடைய இளையாளை, படிறு பேசிக் குடிப்பழுது உரைத்தாய் -
பொய் பேசிக் குடிக்குற்றங் கூறினை; நீ என் காதலி யாகாய் என்று -
(ஆகையால்) நீ எனது மனைவியாகமாட்டா யென்று, கணவனும்
தள்ளிவிட்டான் - நாயகனும் அவளைத் தள்ளிவிட்டனன்.

     கொடிய மூத்தாளை என விகுதி பிரித்துக் கூட்டுக. ஏனை வணிகர்
பழித்த தன்றி என்னும் பொருள் தருதலின் கணவனும் என்பதிலுள்ள உம்மை
எச்சவும்மை. (49)