50திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



ஐம்பத்திரண்டாவது தருமிக்குப் பொற்கிழியளித்த படலம்

               [கலிநிலைத்துறை]
சொற்குவை தேரும் பாவலர் மேவத் தொகுபீடம்
அற்குவை கண்டத் தண்ண லளித்த தறைந்தேமால்
தற்குவை தந்தா லுய்குவ லென்னுந் தருமிக்குப்
பொற்குவை நல்கும் வண்ண மெடுத்துப் புகல்கிற்பாம்.

     (இ - ள்.) சொல்குவை தேரும் பாவலர் மேவ - சொற்கூட்டங்களை
ஆராய்ந்து தெளியும் புலவர்கள் தங்க, தொகு பீடம் - சங்கப் பலகையை,
அல்குவை கண்டத்து அண்ணல் - செறிந்த இருளையுடைய
திருமிடற்றினையுடைய இறைவன், அளித்தது அறைந்தேம் - தந்தருளியதைக்
கூறினேம்; தற்கு உவை தந்தால் உய்குவல் என்னும் தருமிக்கு - தனக்கு
அந்தப் பொற்கிழியிலுள்ள காசுகளை அளித்தாற் பிழைப்பேன் என்று
வேண்டுந் தருமிக்கு, பொன்குவை நல்கும் வண்ணம் எடுத்துப் புகல்கிற்பாம்
- அப் பொற் காசுகளை ஈந்தருளிய திருவிளையாடலை இனி விதந்து
கூறுவாம்.

     சொற்குவை - பெயர் வினை இடை உரிகள் ஆகும் செஞ்சொல்
ஆக்கச் சொல் குறிப்புச் சொல் என்பன. தொகுபீடம் - தொக்கிருக்கும்
பீடம்; சங்கப் பலகை. ஆல், அசை. உவை, சுட்டிடைச் சொல் அடியாகப்
பிறந்த பலவின்பாற் பெயர். (1)

மன்னவர் மன்னன் வங்கிய சூடா மணிமாறன்
தென்னவ ராகித் திகிரி யுருட்டுந் தென்கூடல்
முன்னவ ரன்னங் கண்டறி யாத முடிக்கேற்பப்*
பன்மலர் நல்கு நந்தனம் வைக்கும் பணிபூண்டான்.

     (இ - ள்.) மன்னவர் மன்னன் வங்கிய சூடாமணி மாறன் - வேந்தர்
வேந்தனாகிய வங்கிய சூடாமணி பாண்டியன், தென்னவராகித் திகிரி
உருட்டும் - சுந்தர பாண்டியராய் ஆக்கினா சக்கரஞ் செலுத்திய, தென்கூடல்
முன்னவர் - தென்றிசைக் கண்ணதாகிய நான்மாடக் கூடலில் எழுந்தருளிய
சோமசுந்தரக் கடவுளின், அன்னம் கண்டு அறியாத முடிக்கு ஏற்ப -பிரமனாகிய அன்னப்பறவை காணாத திருமுடிக்குப் பொருந்த, பல்மலர்
நல்கும் - பல மலர்களைக்கொடுக்கும், நந்தனம் வைக்கும் பணிபூண்டான் -
திருநந்தவனம் வைத்தலாகிய திருப்பணியை மேற்கொண்டான்.


     * (பா - ம்.) முடிக்கேற்ற; முடிக்கேற.