அருச்சனைப் படலம் 503



அகத்தியனார் தமக்குத் தமிழறிவுறுத்த செந்தமிழ்ப் பரமாசாரியராகலின்
முருகப் பெருமானை ‘எங்குரு’ என்றார். குருவுறைமலை - சுவாமிமலை;
திருவேரகம். ஆழி யீந்தபுரம் - திருவீழிமிழலை; திருஞானசம்பந்தரும்
திருநாவுக்கரசரும் இறைவன்பாற் படிக்காசுபெற்று அடியார்கட்கு
அமுதூட்டிய தலம்; மூவர் தேவாரமும் பெற்ற சோணாட்டுத்திருப்பதி. நந்தி
நோற்றதலம் - திருவையாறு; திருநாவுக்கரசர் திருக்கைலாய தரிசனம் பெற்ற
தலம்; மூவர் தேவாரமும் பெற்ற சோணாட்டுத் திருப்பதி. (26)

முடங்குகாற் சிலந்தி யானை மலைமகண் முளரி நாட்டத்
தடங்கடல் வண்ண னோற்ற தவநக ரிதுமுச் சென்னி
மடங்கலே றனையா னாம வரையிது குடைந்தோர் பாவம்
அடங்கலும் பருகும் பொன்னி யாறிது காண்மின் காண்மின்.

     (இ - ள்.) முடங்குகால் சிலந்தி யானை மலைமகள் -
வளைந்தகாலையுடைய சிலந்தியும் யானையும் உமையம்மையும்,
முளரிநாட்டம் தடம் கடல் வண்ணன் - தாமரைமலர் போன்ற கண்களையும்
பெரிய கடல்போலுங் கரிய நிறத்தினையு முடைய திருமாலும், தவம் நோற்ற
நகர் இது - தவஞ்செய்த திருவானைக்கா என்னும் பதி இதுவாகும்;
முச்சென்னி மடங்கல் ஏறு அனையான் நாம வரை இது - மூன்று
தலைகளையுடைய சிங்கவேறுபோல்வானாகிய திரிசிரன் பெயரைப்பெற்ற
திரிசிராமலை இதுவாகும்; குடைந்தோர் பாவம் அடங்கலும் பருகும்
பொன்னியாறு இது - மூழ்கியோரின் பாவமனைத்தையும் உண்ணுங்
காவிரியாறு இதுவாகும்; காண்மின் காண்மின் - இவற்றைப் பாருங்கள்
பாருங்கள்.

     நோற்றல் - தவஞ்செய்தல்; இறைவனை வழிபடுதல். தவ நகர் -
ஞான நகர் என்றுமாம். சிலந்தியும் யானையும் பூசித்த வரலாற்றைப்
பெரியபுராணத்துக் கோச் செங்கட் சோழர் வரலாற்றா னறிக. கடல்
வண்ணன் நோற்றமை,

ழுஆழி யாற்கரு ளானைக் காவுடை யாதிழு

எனச் சுந்தரர் தேவாரத்தும் குறிக்கப்பெற்றுளது.

     இஃது ஆனை பூசித்தமையால் திருவானைக்கா எனப்பெற்றது; நாவல்
தல விருக்கமாகலின் சம்புகேசுவரம் எனவும் வழங்கப் பெறுவது;
ஐம்பூதங்களில் அப்பு லிங்கத்தலமாக வுள்ளது; மூவர்தேவாரமும் பெற்ற
சோணாட்டுத் திருப்பதி. முச் சென்னியான் - திரிசிரன்; அவன்
பூசித்தமையின் இது திரிசிராமலை எனவும் திருச்சிராப்பள்ளி எனவும்
பெயரெய்திற்று. இது திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் என்னும் இருவர்
பதிகம் பெற்ற சோணாட்டுத் திருப்பதி. (27)

இந்நதி வெண்முத் தார மெனக்கிடந் திலங்குஞ் சென்னி
மன்னவ னாடீ தென்ப தமிழறி வையைப் பேர்யா
றந்நதி துறக்க மண்மேல் வழுக்கிவீழ்ந் தாங்குத் தோற்றித்
தென்னவ னாடு சேய்த்தாத் தெரிவதே காண்மி னென்றான்.

     (இ - ள்.) இந்நதி வெண்முத்து ஆரம் எனக்கிடந்து இலங்கும் -
இந்நதியானது வெள்ளிய முத்துமாலையைப் போலக் கிடந்து விளங்கும்,
சென்னி மன்னவன் நாடு ஈது என்ப - சோழ மன்னன் நாடு இது என்று
சொல்லுவர்; அந்நதி - அந்தநதியானது, தமிழ் அறிவையைப் பேர்யாறு -