ழுஅறுகுமதி நதிபுனையுஞ் செஞ்சடையெம்
பெருமானை யகத்துட்
கொண்டு
சிறுகுமுரு வுடையமுனி நாரணனார் திருமுடிமேற் செங்கை யோச்சிக்
குறுகுகுறு கெனவிருத்தி யொள்ளரக்கிற் புனைபாவைக் கோல மீது
மறுகுதழ லுற்றென்னக் குழைவித்தோர் சிவலிங்க வடிவஞ் செய்தான்ழு |
என்னும் கந்தபுராணச்
செய்யுள் காண்க. தல விருக்கம் குறும்பலா ஆதலின்
இப்பதி திருக்குறும்பலா எனவும் படும். இஃது ஐந்து மன்றங்களுள்
சித்திரமன்றம் உள்ளது; திருஞானசம்பந்தர் பதிகம் பெற்ற பாண்டி நாட்டுத்
திருப்பதி. முதல் இருந்த பொருப்பு - திருப்பரங்குன்றம்; முருகக்கடவுள்
மகேந்திரபுரியி லிருந்து மீண்ட பொழுது முதலில் வீற்றிருந்து
தெய்வயானையை மணந்த இடமாகலின், இங்ஙனம் கூறினார். முருகவேள்
பரனை (சிவனை) அருச்சித்த இடமாகலின் பரங்குன்று எனப்பட்டது;
முருகக்கடவுளின் படைவீடாகிய தலங்களுள் முதன்மையானது. இப்பதியில்
சுந்தரமூர்த்தி நாயனார் தமிழ் மூவேந்தருடன் சென்று தரிசித்துப் பதிகம்
பாடின ரென்பது, அவர் பதிகத்துத் திருக்கடைக்காப்பின்கண் ழுமுடியா
லுலகாண்ட மூவேந்தர் முன்னே மொழிந்தாறு மோர்நான்கு
மோரொன்றினையும், படியா விவை கற்று வல்லார்ழு என அருளிச் செய்தலா
னறியலாகும். இது திருஞானசம்பந்தர், நம்பியாரூரர் என்னும் இருவர்
தேவாரம் பெற்ற பாண்டி நாட்டுத் திருப்பதி. வடுக்கிடந்த முடியோன் மேய
வளநகர் - திருவேடகம் என்ப; இது திருஞானசம்பந்தர் புனல் வாதத்தில்
பாசுரம் எழுதி யிட்ட திருவேடு வையையில் எதிர்த்துச் சென்று தங்கிய
இடமாதலைச் சமணரைக் கழுவேற்றிய படலத்தா லறிக. இது
திருஞானசம்பந்தர் பதிகம் பெற்ற பாண்டி நாட்டுத் திருப்பதி. (34)
கொண்டல் படியுந் திருவாப்ப னூருந் தொழுது குளிர்திரைக்கை
வண்டு படியுங் கமலமுக வையைப் பிராட்டி யெதிர்வணங்கிக்
கண்டு பணிந்து திசையெட்டும் விழுங்கி யண்டங் கடந்துலகம்
உண்ட நெடியோ னெனவுயர்கோ புரமுன் னிறைஞ்சி யுள்புகுதா.* |
(இ
- ள்.) கொண்டல் படியும் திருவாப்பனூரும் தொழுது - முகில்கள்
படியுஞ் (சோலைசூழ்ந்த) திருவாப்பனூருமாகிய இப்பதிகளை வணங்கி,
குளிர்திரைக் கை வண்டுபடியும் கமலமுக வையைப் பிராட்டி - குளிர்ந்த
அலைகளாகிய கையையும் வண்டுகள் படியுந் தாமரையாகிய முகத்தையுங்
கொண்ட வையையாகிய பெருமாட்டியை, எதிர்கண்டு பணிந்து வணங்கி -
எதிரிற் கண்டு வீழ்ந்து வணங்கி, திசை எட்டும் விழுங்கி - எட்டுத்
திசைகளையும் விழுங்கி, அண்டம் கடந்து - அண்டத்தைக் கடந்து, உலகம்
உண்ட நெடியோன் என - உலகத்தை உண்ட திருமாலைப்போல,
உயர்கோபுரம் முன் இறைஞ்சி - உயர்ந்த கோபுரத்தை முன் வணங்கி, உள்
புகுதா - உள்ளேசென்று.
கொண்டல்
படியும் சோலை சூழ்ந்த என விரித்துரைக்க; கொண்டல்
படியும் கோயில் என்றுமாம். ஒரு பாண்டி வேந்தன் பொருட்டு இறைவன்
ஆப்பினிடத்திற் றோன்றி யருளினமையால் இது திருவாப்பனூர் எனப்பட்டது.
கொடுங்குன்று முதலாக எண்ணிவந்தவற்றை இரண்டனுருபு விரித்துத்
தொழுது என்பது கொண்டு முடிக்க. திருவாலவாய்க் கோபுரத்தை இறைஞ்சி
மதுரைத் திருப்பதியின் உள்புகுந்து என்க. இப்பதியிலே சோமசுந்தரக்
கடவுள் புரிந்த அற்புதத் திருவிளையாடல்களை உணர்த்த வெழுந்தது
இப்புராணமாகலின் இதன் சிறப்பை இப்புராணத்து ஆண்டாண்டுக் காண்க.
(பா
- ம்.) * உள்புகுந்தார்.
|