கடவுள் வாழ்த்து]509



இது விராட் புருடனுக்குத் துவாதசாந்தத் தலமாக வுள்ளது ; ஐந்து மன்றங்களில் வெள்ளிமன்றம் உடையது ; திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் என்னும் இருவர் தேவாரம் பெற்ற பாண்டிநாட்டுத் திருப்பதி. (35)

மறுகு தோறும் பணிந்தெழுந்து வளைந்து வளைந்து பொற்கோயில்
குறுகி விதியாற் பொற்கமலங் குடைந்து செய்யுங் குறைநிறுவி
உறுதி பெறவைந் தெழுத்தெண்ணி யூற்று மதத்து நாற்றடந்தோட்
சிறுகு கண்ண வைங்கரத்துச் சித்தி யானை யடிவணங்கா.

     (இ - ள்.) மறுகுதோறும் பணிந்து எழுந்து வளைந்து வளைந்து - வீதிகடோறும் விழுந்து வணங்கி எழுந்து பலமுறை வலம் வந்து, பொன் கோயில் குறுகி - பொன்மயமாகிய திருக்கோயிலை அடைந்து, பொற்கமலம் விதியால் குடைந்து - பொற்றாமரையில் விதிப்படி நீராடி, செய்யும் குறை நிறுவி - செய்ய வேண்டிய இன்றியமையா வினைகளைச் செய்து, உறுதிபெற ஐந்தெழுத்து எண்ணி - உறுதிப் பயனை யடையத் திருவைந்தெழுத்தைச் செபித்து, ஊற்று மதத்து நால் தடந்தோள் - கொட்டும் மதநீரையும் பெரிய நான்கு திருத்தோள்களையும், சிறுகு கண்ண ஐங்கரத்துச் சித்தியானை அடி வணங்கா - சிறிய கண்களையும் ஐந்து திருக்கரங்களையு முடைய சித்திவிநாயகரின் திருவடிகளை வணங்கி.

     குறை - இன்றியமையாக் கடன். உறுதிபெற எண்ணி என்பதற்கு "ஊனி
லுயிர்ப்பை யொடுக்கி யொண்சுடர் ஞான விளக்கினை யேற்றி நன்புலத்
தேனை வழி திறந்து" திட்பமுடன் எண்ணி என்றுரைத்தலுமாம். கண்ண
என்பது குறிப்புப் பெயரெச்சம்; அதனை ஐங்கரத்தையு முடைய என
இறுதிக்கண் மாறியுரைக்க. (36)

மும்மை யுலகு நான் மறையு முறையா லீன்ற வங்கயற்கண்
அம்மை யடிகண் முடியுறத்தாழ்ந் தன்பு கொடுத்தின் னருள்வாங்கி
வெம்மை யொளிகான் மணிக்கனக விமானத் தமர்ந்த தனிச்சுடரின்
செம்மை யடித்தா மரைவேணிச் சிரமேன் மலரப் பணிந்தேத்தா.

     (இ - ள்.) மும்மை உலகும் நான்மறையும் முறையால் ஈன்ற - மூன்று
உலகங்களையும் நான்கு மறைகளையும் முறையாற் பெற்ற, அங்கயற்கண்
அம்மை அடிகள் முடி உறத் தாழ்ந்து - அங்கயற்கண்ணம்மையாரின்
திருவடிகள் முடியிற் பொருந்த வீழ்ந்து வணங்கி, அன்பு கொடுத்து இன்
அருள் வாங்கி - அன்பினைக் கொடுத்து இனிய அருளைப் பெற்று,
வெம்மை ஒளிகால் மணிக்கனக விமானத்து அமர்ந்த - விரும்பத்தக்க
ஒளியினை வீசும் மணிகள் அழுத்திய பொன்னாலாகிய விமானத்தின்கண்
எழுந்தருளிய, தனிச்சுடரின் செம்மை அடித்தாமரை - ஒப்பற்ற
ஒளிவடிவினனாகிய சோமசுந்தரக் கடவுளின் சிவந்த திருவடித் தாமரைகள்,
வேணிச்சிரமேல் மலரப் பணிந்து ஏத்தா - சடையினையுடைய முடியின்மேல்
மலராநிற்க வணங்கித் துதித்து.

     அம்மையடிகள் முடியில் உற அவற்றைத் தாழ்ந்து என்றும்,
அடித்தாமரை சிரமேல் மலர அவற்றைப் பணிந்து என்றும் விரித்துரைக்க.
நிறை அன்புடன் வணங்கி அருள்பெற்று என்பார் ‘அன்பு கொடுத்து
இன்னருள் வாங்கி’ என்றார். அம்மையினருள் பெற்று அப்பனை வணங்கச்
சென்றார் என்க. அன்பு கொடுத்து அருள்பெற்று என்றது பரிவருத்தனையணி.
(37)