கடவுள் வாழ்த்து]513



வெங்கரி யாவி சோர நரசிங்க வாளி விடுவேட ரேறு சரணம்
புங்கவர் தேற வாதி மறையுட் கிடந்த பொருளோது போத சரணம்
வங்கம தேறி வேலை மகரம் பிடித்த வலையாண் மணாள சரணம்
கங்கண நாகம் வீசி நகரெல்லை கண்ட கறைகொண்ட கண்ட சரணம்.

     (இ - ள்.) வெம் கரி ஆவி சோர - (சமணரேவிய) கொடிய
யானையின் உயிர் நீங்க, நரசிங்கவாளி விடு வேடர் ஏறு சரணம் - நரசிங்க
பாணத்தை விட்ட வேடரேறு போலுந் திருக்கோல முடையவனே
அடைக்கலம்; புங்கவர் தேற - கண்ணுவர் முதலிய முனிவர்கள் தெளிய,
ஆதி மறையுள் கிடந்த பொருள் ஓது போத சரணம் - முதனூாகிய
வேதத்தினுள் மறைந்து கிடந்த பொருளை அருளிச் செய்த ஞான
வடிவினனே அடைக்கலம்; வங்கமது ஏறி - தோணியில் ஏறி, வேலை மகரம்
பிடித்த - கடலிலுள்ள சுறாமீனைப் பிடித்த, வலையாள் மணாள சரணம் -
நெய்த னிலத் தலைவன் புதல்வியாகிய இறைவியை மணந்த மணவாளனே
அடைக்கலம்; கங்கண நாகம் வீசி நகர் எல்லை கண்ட - கையிற்
கங்கணமாகிய பாம்பை விடுத்து நகரின் எல்லையைக் காட்டி யருளிய,
கறைகொண்ட கண்ட சரணம் - நஞ்சக் கறையினைக் கொண்டருளிய
திருமிடற்றினை யுடையவனே அடைக்கலம்.

     வங்கமது, அது பகுதிப்பொருள் விகுதி. மகரம் பிடித்த வலையாள்
மணாள - மகரத்தைப் பிடித்து அதனால் வலையாளை மணந்த மணாள
என்க. (44)

மைந்தனி லாழி மேரு மகவா னகந்தை மடிவித்த நித்த சரணம்
சுந்தர நாம வாளி பணிகொண்டு கிள்ளி தொகைவென்ற வீர சரணம்
வெந்திறன் மாறன் முன்க லுருவானை கன்னன் மிசைவித்த சித்த
                                                சரணம்
முந்திய கல்லின் மாதர் பெறவட்ட சித்தி முயல்வித்த யோகி சரணம்.

     (இ - ள்.) மைந்தனில் - புதல்வனாகிய உக்கிரகுமார வழுதியினால்,
ஆழி மேரு மகவான் அகந்தை மடிவித்த நித்த சரணம் - கடலின்
செருக்கையும் மேரு மலையின் செருக்கையும் இந்திரன் செருக்கையும்
அழித்தருளிய அழிவில்லாதவனே அடைக்கலம்; சுந்தர நாமவாளி
பணிகொண்டு - சுந்தரப் பேரம்பினை ஏவல்கொண்டு, கிள்ளி தொகை
வென்ற வீர சரணம் - விக்கிரம சோழனுடைய படைத் தொகுதியை
வென்றருளிய வீரனே அடைக்கலம்; வெந்திறல் மாறன் முன் - மிக்க
வலியினை யுடைய அபிடேக பாண்டியன் முன்னர், கல் உரு ஆனை
கன்னல் மிசைவித்த சித்த சரணம் - கல்லானைக்குக் கரும்பினை அருத்திய
சித்தனே அடைக்கலம்; முந்திய கல்லின் மாதர் அட்டசித்தி பெற - முற்பட்ட
கல் வடிவாகக் கிடந்த இயக்கிய ரறுவரும் அட்டமாசித்திகளையும் அடைய,
முயல்வித்த யோகி சரணம் - செய்வித்த யோகியே அடைக்கலம். (45)

திருமணி மைந்தன் மைந்தன் முடிசூட விற்ற திருமல்கு செல்வ
                                              சரணம்
மருமக னென்று மாம னுருவாய் வழக்கு வலிபேசு மைந்த சரணம்
குருமொழி தந்து நாரை குருவிக்கு வீடு குடிதந்த வெந்தை சரணம்
வருபழி யஞ்சி வேட மகனுக் கிரங்கு மதுரா புரேச சரணம்.

     (இ - ள்.) மைந்தன் மைந்தன் முடிசூட - வீரபாண்டியன்
புதல்வனாகிய அபிடேக பாண்டியன் முடி சூடும் பொருட்டு, திருமணி விற்ற
திருமல்கு செல்வ சரணம் - சிறந்த மாணிக்கங்களை விற்ற சிறப்பு மல்கிய
செல்வனே