அன்ன,
அகரச் சுட்டின் றிரிபு. தாழ் வோனாகிய தென்னன் எனக்
கூட்டுக. சண்பகசுந்தரர் என்று பெயர் கூறி வணங்கினன் என்க. (7)
அன்னதொர்
நாமம் பெற்றன ரின்று மணிக்கூடன்
முன்னவ ரந்தத் தாமம வர்க்கு முடிக்கேற்றும்
இன்னதொர் நீராற் சண்பக மாற னென்றேபேர்
மன்னிவி ளங்கினன் வங்கிய சூடா மணிதானும். |
(இ
- ள்.) அணிக்கூடல் முன்னவர் - அழகிய கூடலில் எழுந்தருளிய
முதல்வராகிய சோமசுந்தரக்கடவுள், இன்றும் அன்னது ஓர் நாமம் பெற்றனர்
- இதுபோதும் அந்த ஒரு திருநாமத்தைப் பெற்றார்; அந்தத் தாமம் - அந்தச்
சண்பக மாலைகளை, அவர் முடிக்கு ஏற்றும் இன்னதொர் நீரால் - அவரது
திருமுடிக்கு ஏற்றும் இத்தன்மையால். வங்கிய சூடாமணியும் - வங்கிய
சூடாமணி என்னும் பாண்டியனும். சண்பக மாறன் என்றே பேர் மன்னி
விளங்கினன் - சண்பக பாண்டியன் எனப் பெயரெய்தி விளங்கினன்.
அன்னது,
இன்னது என்பன சுட்டுத் திரிபுகள். ஒர், விகாரம்.
இறுதியிலுள்ள உம்மை எச்சவும்மை. (8)
சண்பக மாறன்
சண்பக சுந்தரர் தம்மாடே
நண்பக மாறா நன்பணி செய்யு நன்னாளிற்
பண்பகர் சொல்லார் தம்புடை மாரன் படுபோர்மூண்
டெண்பக வெய்வா னாகிய வந்தன் றிளவேனில். |
(இ
- ள்.) சண்பகமாறன் - சண்பகபாண்டியன், சண்பக சுந்தரர்
தம்மாடு - சண்பக சுந்தரரிடத்து, நண்பு அகம் மாறா நன்பணி செய்யும்
நல்நாளில் - அன்பு உள்ளத்தினின்றும் நீங்காமல் நல்ல திருப்பணி
செய்துவரும் நல்ல நாளில், பண்பகர் சொல்லார் தம்புடை - பண்ணும்
புகழுஞ் சொல்லினையுடைய மகளிரிடத்து, மாரன் படுபோர் மூண்டு -
மதவேள் மிக்க போர்த்தொழிலின் மூண்டு, எண்பக எய்வான் ஆகிய -
அளவிறப்ப அம்புகளை எய்ய, இளவேனில் வந்தன்று - இளவேனிற்காலம்
வந்தது.
நண்பு
- நண்ணுதல் என்றுரைப்பாருமுளர். பண்பகர் சொல்லார்
என்பதற்குப் பண்போலப் பகர்கின்ற சொல்லார் என்றும், கேட்போர்
பண்ணென்று கூறும் சொல்லினையுடையார் என்றும் உரைத்தலுமாம்;
எண்பக என்பதற்கு நெஞ்சுபிளக்க என்றுரைத்தலும் ஆம். எய்வானாகிய,
ஒருசொல்; செய்யிய வென்னும் வினையெச்சம். வந்தன்று, உடன்பாட்டு
முற்று. (9)
[அறுசீரடியாசிரியவிருத்தம்]
|
மனிதர்வெங்
கோடை தீர்க்கும் வசந்தமென் காலும் வேறு
துனிதவி ரிளங்கால் வேண்டுஞ் சோலையுஞ் சோலை வேண்டும்
புனிதநீர்த் தடமும் வேறு புதுமல ரோடை வேண்டும்
பனிதரு மதியும் வேறு பான்மதி வேண்டுங் காலம். |
|