(இ
- ள்.) (அவ்விளவேனில்) மனிதர் வெங்கோடை தீர்க்கும் வசந்த
மென்காலும் - மக்களின் கொடிய வெப்பத்தைப் போக்கும் இளந்தென்றலும்,
துனிதவிர் வேறு இளங்கால் வேண்டும் - (தனது வெப்பத்தாலாகிய)
துன்பத்தை நீக்கும் வேறு இளந்தென்றலை விரும்பும், சோலையும் சோலை
வேண்டும் - சோலையும் வேறு சோலையை விரும்பும், புனித நீர்த்தடமும் -
தூயநீர் நிறைந்த தடாகமும், வேறு புதுமலர் ஓடைவேண்டும் - வேறு நாள்
மலர் நிறைந்த நீரோடையை விரும்பும், பனிதரு மதியும் - மக்களுயிர்க்குத்
தட்பந் தருஞ் சந்திரனும், வேறு பால் மதி வேண்டும் - வேறு வெள்ளிய
சந்திரனை விரும்பும், காலம் - காலமாயிருந்தது.
மனிதர்
வெங்கோடை தீர்க்கும் என்னும் அடையைச் சோலை முதலிய
வற்றோடும் கூட்டி, வேண்டும் என்னும் பெயரெச்சம் நான்கனையும் காலம்
என்பதனோடு தனித்தனி முடிக்க. மக்கள் வெப்பொழிக்கும் தண்ணிய
பொருள்களும் தமக்கு வேறு தண்ணிய பொருள்களை விரும்புமெனக்
கூறியது வெம்மை மிகுதியைக் குறிப்பாகத் தந்து நிற்றலால் இது குறிப்பு
என்னும் குணவணியாகும். பெருங்காப்பியத்திற்குரிய பருவ வருணனை இது
முதலிய செய்யுட்களாற் கூறப்படுகின்றது. (10)
அண்டவான் றருமேற் சீறிச் சிவந்தெழுந் தாங்குத் தேமாத்
தண்டளி ரீன்று வானந் தைவர நிவந்த காசு
கொண்டிடை யழுத்திச் செய்த குழையணி மகளிர் போல
வண்டிறை கொள்ளப் பூத்து மலர்ந்தன செருந்தி யெல்லாம். |
(இ
- ள்.) தேமா - மாமரங்கள், அண்டவான் தருமேல் சீறிச் சிவந்து
எழுந்தாங்கு - வானின்கண் உள்ள சிறந்த கற்பகத் தருவின்மேற் சீறிச்
சிவந்தெழுந் தாற்போல, தண் தளிர் ஈன்று - தண்ணிய செந்தளிர்களைத்
தந்து, வானம் தைவர நிவந்த - வானுலகை யளாவ உயர்ந்தன; காசு
கொண்டு இடை அழுத்திச் செய்த - நீலமணிகளைக்கொண்டு இடையிடையிற்
பதித்துச் செய்த, குழை அணி மகளிர் போல - காதணியை அணிந்த
பெண்கள்போல, செருந்தி எல்லாம் - செருந்திகள் அனைத்தும், வண்டு
இறைகொள்ளப் பூத்து மலர்ந்தன - வண்டுகள் இடையிடை தங்கப் பூத்து
மலர்ந்தன.
சிவத்தல்
- வெகுளலும் செந்நிற முறுதலும் ஆம். புளிமா
ஒன்றுளதாதலாற் பிறிதினியைபு நீக்கிய விசேடணந்தந்து தேமா என்றார்.
தைவர - தடவ. நிவந்த, அன்பெறாத பலவின்பால் முற்று. செருந்திமலர்
பொற்குழைபோன்றும், வண்டு நீலமணி போன்றும் விளங்கினவென்க.
மாமரங்கள் இயல்பாகத் தளிர்த்து உயர்ந்தமையைத் தேவதருக்கள்மேற்
சீறிச் சிவந்தெழுந்தாற்போல எனக் கற்பித்துக் கூறுதலால் தற்குறிப்பேற்ற
வுவமையணி; வானுலகுடன் சம்பந்தமில்லாதிருக்கச் சம்பந்தம் கற்பித்து
வானந் தைவர நிவந்த எனக் கூறுதலால் தொடர் புயர்வு
நவிற்சியணி;
இவ்விரண்டும் விரவுதலால் இச்செய்யுள் கலவையணி.
(11)
|